மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது (1 சாமு. 15:12).
கடைசி நாட்களில் அனேகர் தங்களுக்கென்று ஜெயஸ்தம்பத்தை (Monument) நாட்டுகிறவர்களாய் காணப்படுகிறார்கள். சிநேயார் தேசத்து ஜனங்கள், நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் (ஆதி. 11:4) என்று கூறினதைப் போல தங்களுடைய பெயர் புகழுக்காக அனேக காரியங்களைச் செய்வதும் உண்டு. ஆனால் நம்முடைய தேவன் பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவர். கர்த்தருடைய பிள்ளைகள் எதைச் செய்தாலும் கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காய் செய்யவேண்டும். யோவான் ஸ்நானகனைப் போல அவர் பெருகவும் நாம் சிறுகவும் வேண்டும் என்ற சிந்தையில் நாம் காணப்படவேண்டும்.
சவுலை இஸ்ரவேலின் மேல் முதல் ராஜாவாகக் கர்த்தர் ஏற்படுத்தின நோக்கங்களில் ஒன்று அமலேக்கியர்களை முழுவதுமாக சங்கரிக்க வேண்டும். சவுலின் நாட்களிலிருந்து சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடாய்த்தவர்களாய் புறப்பட்டு வந்த வேளையில், செங்கடலைத் தாண்டின உடன், முதன்முதலாய் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்தவர்கள் அமலேக்கியர்கள் (யாத். 17:8-16), கர்த்தர் அந்தக் காரியத்தை மனதில் வைத்து அவர்களை அழிக்க சித்தம் கொண்டார். தேவன் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்குச் சவுலை சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினார். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவர் மேலும் கர்த்தர் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். நம்மைக்கொண்டு அனேகக் காரியங்களை அவருடைய நாமத்தின் மகிமைக்காய் செய்யக் கர்த்தர் தீர்மானித்திருக்கிறார். அதற்காய் தான் நம்மை விசுவாசிகளாய், ஊழியக்காரர்களாய் தெரிந்தெடுத்திருக்கிறார். அதற்கு உகந்த பாத்திரங்களாக நாம் காணப்பட முடியும், அதுபோல நம்மைக்குறித்த தேவதிட்டத்தை தோல்வியில் முடியப்பண்ணுகிறவர்களாகவும் கூட நாம் காணப்பட முடியும்.
சவுல் யுத்தத்திற்குக் கடந்து சென்றான். ஆனால் அமலேக்கியர்களின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடு வைத்தான், ஆடுமாடுகளில் முதல் தரமானவற்றையும், இரண்டாம் தரமானவற்றையும், உயிரோடு தனக்கென்று வைத்துக்கொண்டான். கர்த்தருடைய கட்டளைகளில் ஒருபகுதியைச் செய்து, மற்றவற்றை விட்டுவிட்டான். அதன்பின்பு, கர்த்தருடைய வார்த்தையை மீறினதைக் குறித்த கவலையே இல்லாமல், தன்னுடைய பெயர் பிரஸ்தாபத்திற்கென்று ஜெயஸ்தம்பத்தை நாட்டிப் பெருமைகொள்ளுகிறவனாய், திருப்திப் படுகிறவனாய் காணப்பட்டான். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று பொய் சொல்லுகிறவனாய் காணப்பட்டான். சாமுவேல் தீர்க்கதரிசியால் உணர்த்தப்பட்டபின்பு கூட, தன்பிழையை மறைத்து தன் ஜனங்கள் தவறு செய்தார்கள், அதுவும் கர்த்தருக்கு பலியிடுவதற்கு முதல்தரமானவற்றைப் பிடித்து வைத்தார்கள் என்று, தன் தவற்றிலும் கூட, வீணாய் கர்த்தருடைய பலியைக் குறித்தும் பொய் சொல்லுகிறவனாய் காணப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் கர்த்தர் எதிர்பார்ப்பது நூறு சதவிகித கீழ்ப்படிதலாகும். மோசே செய்த ஒரு தவறு, அவனைக் கானானுக்குள் பிரவேசிக்கக் கூடாமல் செய்தது. கர்த்தருடைய வார்த்தைகளில் ஒருபகுதியைக் கைக்கொண்டு, மற்றவற்றை விட்டுவிட்டால் நாம் பரிதபிக்கப்படதக்கவர்களாகி விடுவோம். கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப் பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நம்முடைய கீழ்ப்படியாமை, மற்றவர்களுக்குப் பில்லிசூனியம் வைப்பதற்கும், விக்கிரக ஆராதனை செய்வதற்கும் சமமாய் காணப்படுகிறது. நம்முடைய தவறுகளை மற்றவர்கள் மேல் போட முயலக் கூடாது. தன் பிழைகளை உணருகிற மனுஷன் யார்?.
கர்த்தருடைய கட்டளைகளை மீறிய பின்பு கூட தனக்காய் ஜெயஸ்தம்பத்தை நாட்டிப் பெருமைகொள்ளுகிறவனாய் காணப்பட்ட சவுலைப் போலக் காணப்படாதிருங்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களைத் தாழ்த்தி, கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையான காரியங்களைச் செய்யும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar