தேவசேனையைப்போல மகா சேனையாவீர்கள்.

அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள் (1 நாளா. 12:22).

கர்த்தருடைய ஜனங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல பலுகிப் பெருகுவீர்கள், தேவசேனையைப்போல மகா சேனையாவீர்கள். தாவீது யூதாவின் மேல் ராஜாவாகி,  ஏழு வருடங்கள் எபிரோனிலிருந்து ராஜ்யபாரம் பண்ணினான். யூதா கோத்திரத்தைத் தவிர மற்ற இஸ்ரவேல் கோத்திரங்கள் தாவீதை ராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் காத்தர் சவுலை அகற்றி, ராஜ்யபாரத்தை தாவீது வசமாக திருப்பின போது, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் தாவீது பட்சமாய் சேர்ந்தார்கள். ஆகையால் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள், இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று. தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்ததன் காரணம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். கர்த்தர் சவுலின் குடும்பத்தாரோடே இல்லாமல் போனதால், அவர்கள் வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள்.

கடைசி நாட்களில் எல்லா ஜனங்களுடைய இருதயங்களும் தாவீதின் குமாரனாகிய இயேசுவுக்கு நேராகத் திரும்பும். இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் நாட்களும்,  எல்லாருடைய முழங்கால்களும் அவருக்கு முன்பு முடங்கும் நாட்களும் வருகிறது. கர்த்தர் மாம்சமான யாவர் மேலும் தன் ஆவியை ஊற்றும் போது அது சம்பவிக்கும். ஆவியானவரின் எழுப்புதலின் தீ தேசங்களில் பற்றி பரவும்போது ஜனங்கள் கர்த்தரண்டை இழுக்கப்படுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள் (1 நாளா. 12:38), அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாகக் கர்த்தர் ஒருமனதைக் கட்டளையிடும் போது, ஜனங்களுக்குள் ஒரே சிந்தையையும், ஒரே தரிசனமும், ஐக்கியமும் உண்டாகும்,  சபைகள் வளர்ந்து பெருகும், தேசங்கள் கர்த்தருடைய பிள்ளைகளால் நிரம்பும்.

கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தர் நம்மோடுகூட இருப்பதை அனுதினமும் உறுதிசெய்யவேண்டும். சிம்சோன் கர்த்தருடைய ஆவியானவர் தன்னை விட்டு விலகினதை அறியாமல் எப்போதும் போல பெலிஸ்தியர்களை உதறித்தள்ளுவேன் என்றான், ஆனால் பலட்சயப்பட்டவனாய், பெலனற்றவனாய், கண்கள் பிடுங்கப்பட்டவனாய், வேடிக்கை காட்டுகிறவனாய் மாறிப்போனான். லவோதிக்கேயா சபை அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வெதுவெதுப்பாய் மாறினதின் நிமித்தம், இயேசுவை சபையை விட்டு வெளியேற்றி, வாசல்படியில் நின்று தட்டும் படிக்குச் செய்தது. நம்முடைய துணிகரமான தவறுகளும் பாவங்களும் கர்த்தருடைய முகத்தை நம்மை விட்டு மறைக்கிறது. திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் முந்தி பிடித்து, பூவும் பிஞ்சுமாயாய் காணப்படுகிற சபையென்னும் தோட்டத்தைப் பாதுகாப்பதும், உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாய் காணப்படுகிறது.

கர்த்தருக்குப் பிரியமானதை அனுதினமும் நீங்கள் செய்யும் போது, கர்த்தர் உங்களோடு காணப்படுவார். அப்போது தேவசேனையைப்போல மகா சேனையாகி இடங்கொண்டு பெருகுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *