சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
ஒருவேளை உங்களுக்கு தீங்கு செய்ய அநேக ஜனங்கள் எழும்பலாம். உங்களைக்குறித்து அபத்தம் பேச விரும்புபவர்கள் அநேகராயிருக்கலாம். தங்கள் வாயினால் ஆசிர்வதித்து உள்ளதினால் சபிக்கிறவர்கள் இருக்கலாம். ஆனாலும் தாவீது சொல்வதுபோல நான் தேவனையே நோக்கி அமர்ந்திருப்பேன். நான் நம்புகிறது அவராலே வரும். காரணம் அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை (சங் 62 : 2 ) என்ற ஒரு அசாதாரணமான உறுதி இருக்குமென்றால் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். அநேகர் தங்களுடைய நம்பிக்கையை மனிதர்கள் மீது வைப்பதினால் தோல்வியடைந்து போய் விடுகிறார்கள். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் அசைக்கப்படுவதில்லை.
உங்களுக்கு இருக்கும் பாரத்தை மனிதர்கள் மேல் வைக்காமல் வசனம் சொல்கிறபடி கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்கீதம் 55:22 ) என்பதின்படி அவர் மேல் பாரத்தை வைத்துவிடுங்கள்.
சவுலுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான் ( 1 சாமு 13 : 14 ) என்பதாக சொல்லி கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற மனுஷனை ராஜாவாக்கும்படி கர்த்தர் சித்தம் கொண்டார். அவர் சித்தத்தின்படியே பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார் ( அப் 13 : 22 ).
எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும் ஆண்டவருடைய சித்தத்தை செய்பவனாக, மனிதர்கள் மேல் தன் நம்பிக்கையை வைக்காதவனாக இருந்தான். மாத்திரமல்ல, தாவீதை கோலியாத் மற்றும் சவுல் துவக்கி அப்சலோம் வரை அநேகர் அவனை துரத்தினபோதும், அவனுக்கு விரோதமாக வந்து கொத்தளங்களை போட்ட போதும், தாவீதும் சொன்னான் நான் நம்புவது நான் ஆராதிக்கிற கர்த்தரால் வரும்.
ஒருவேளை கர்த்தர் மேல் இருக்கிற உங்கள் நம்பிக்கை சிறியதாக இருக்குமென்றால் நீங்கள் சிறிய அளவில் தான் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளமுடியும். மாறாக கர்த்தர் மேல் எல்லா காரியங்களிலும் நம்பிக்கையோடு இருப்பீர்களென்றால் அதிக அளவு ஆசிர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்வீர்கள். இரவுமுழுவதும் பிரயாசப்பட்டும் மீன்கள் அகப்படவில்லை என்ற வருத்தத்துடன் இருந்த பேதுரு பின்பு இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையால் வலையை மீண்டும் போட்டபோது, அவன் நினைக்க கூடாத அளவுக்கு மீன்களை பிடித்தான். அப்போஸ்தலனாகிய பவுல் எப்பொழுது கிறிஸ்துவின் மீது தன் நம்பிக்கையை வைத்தானோ, அதன் பிறகு அவன் பல தேசங்களை கர்த்தருக்காக சுதந்தரித்துக்கொண்டான். பெரும்பாடுள்ள ஸ்திரி எப்பொழுது தன் நம்பிக்கையை இயேசு மீது வைத்தாலோ, அப்பொழுது தன் சரீரத்திலிருந்த வியாதி சொஸ்தமாகி அற்புதத்தை பெற்றுக்கொண்டாள்.
சூழ்நிலைகள் எதிராக வரும்போது தேவனையே நோக்கி அமர்ந்து அவருடைய உதவிக்காக காத்திருந்து அவரையே நம்பிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் அசைக்கப்படுவதில்லை.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org