நான் உன்னை விடுவிப்பேன்.

நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு,  உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்,  நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங்கீதம் 50:14, 15).

தாவீது ராஜா அனேக லேவியர்களை தேவனை ஆராதிக்கிற பாடற்குழுவில் வைத்திருந்தார். அவர்களில் ஒருவன் ஆசாப். தாவீதைப் போல ஆசாப்பும் பாடல்களைப் பாடுவதிலும்,  பாடல்களை எழுதுவதிலும் கிருபை பெற்றவனாய் காணப்பட்டான். அவன் எழுதின 12 பாடல்கள்,  சங்கீத புஸ்தகதில் காணப்படுகிறது. அவற்றில் ஒன்று 50-வது சங்கீதம்,  மற்றவை 73 முதல் 83 வரைக்கும் காணப்படுகிறது. கர்த்தர் தனக்குக் கொடுத்த தாலந்துகளைக் கர்த்தருடைய மகிமைக்காகப் பயன்படுத்துகிற பாத்திரமாக ஆசாப் காணப்பட்டார். அவரைப் போலக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும்  கொடுத்த கிருபைகளை,  உங்களுக்கு இருக்கிற பலத்தோடு,  கர்த்தருக்காகப் பயன்படுத்துங்கள்,  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு வசனங்களில் நம்முடைய ஆபத்து வேளையில்,  கடினமான சூழ்நிலைகளில் நாம் தப்புவிக்கபடபடுவதற்கு நாம் செய்ய வேண்டிய ஆலோசனைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். அனேக வேளைகளில் நாம் நம்முடைய ஆபத்து வேளைகளில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறோம்,  வியாதிகளின் நேரங்களில் கூப்பிடுகிறோம்,   ஆனால் சூழ்நிலைகள் சரியாய் காணப்படும் போது கர்த்தரை நினைப்பதில்லை,  அவருக்குரிய மகிமையைச் செலுத்துவதும் இல்லை. அவரைத் தேடுவதும் இல்லை. அப்படிப்பட்ட பாத்திரங்களாய் கர்த்தருடைய பிள்ளைகள் காணப்படக் கூடாது.

ஸ்தோத்திரப் பலியிடுவது,  கர்த்தர் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துவதாய் காணப்படுகிறது. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.  அவற்றைத் தேவனுக்கு எப்பொழுதும் நாம் செலுத்தவேண்டும். சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல  என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி,  என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி,  அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து எப்பொழுதும் நன்றி செலுத்த வேண்டும். கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்துவது தான்,  இன்னும் அதிக ஆசீர்வாதங்களை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதின் ரகசியமாய் காணப்படுகிறது.

அதோடு கூட உன்னதமான தேவனுக்கு உங்களுடைய பொருத்தனைகளைச் செலுத்துங்கள்.    நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால்,  அதைச் செலுத்தத் தாமதியாதே என்று வேதம் எச்சரிக்கிறது. அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை,  நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும்,  நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். யாக்கோபு வனாந்தரத்தில் தனக்குத் தரிசனமாகி,  தன்னோடு கூட இருந்து ஆசீர்வதிப்பேன் என்று வாக்களித்த தேவனுக்கு,  தான் திரும்பிவரும் போது அதே இடத்தில் பலிபீடத்தைக் கட்டி பலிகள் செலுத்துவேன் என்று பொருத்தனை பண்ணிக் கொண்டான்.  ஆனால் இருபது வருஷங்கள் கழிந்து,  கர்த்தர் வாக்களித்தபடி இரண்டு பரிவாரங்களாய் அவனை ஆசீர்வதித்து,  பதான்அராமிலிருந்து திருப்பியழைத்துக் கொண்டு வந்தபின்பு,  தன்னுடைய பொருத்தனைகளை மறந்துபோனான். அதன் நிமித்தம் தன் வாழ்க்கையில் மீண்டும் பலவேதனைகளை தன் மகளாகிய தீனாளிமித்தமும்,  அவன் குமாரர்களாகிய லேவி,  சிமியோன் மூலமும் அனுபவித்தான். அவன் வேதனைகள் வழியாகக் கடந்து சென்ற வேளையில் மீண்டும் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நீ எழுந்து பெத்தேலுக்குப் போய்,  அங்கே குடியிருந்து,  நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது,  உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்று நினைப்பூட்டினார். உடனே அவன் எழுந்துசென்று பெத்தேலிலே தனக்கு தரிசனமான தேவனுக்கு,  பொருத்தனைகளை நிறைவேற்றினான். உங்கள் பொருத்தனைகளைக் கர்த்தருக்குச் செலுத்துவதற்கு தாமதியாதேயுங்கள். நாம் தாழ்வில் காணப்பட்ட போது அனேக பொருத்தனைகளை ஏறெடுத்திருப்போம்,  ஆனால் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்தின பின்பு நம்முடைய பொருத்தனைகளை நிறைவேற்றியிருக்கிறோமா? அனேக வேளைகளில் தவறியிருக்கக் கூடும். ஆகையால் இப்போது பல பாடுகள் கூட நம் வாழ்க்கையில் காணப்படக்கூடும். இனியாகிலும் கர்த்தருக்குப் பொருத்தனைகளை நிறைவேற்றுகிற பாத்திரங்களாய் காணப்படுவோம்.

நாம் இப்படிச் செய்யும் போது நம்முடைய ஆபத்துக்காலத்தில்,  நாம் கர்த்தரை  நோக்கிக் கூப்பிடும்  போது,  அவர் நம்மை கேட்டருளி விடுவிப்பார்,  அனுகூலமான துணையாக மாறுவார். யோசபாத் என்று யூதாவின் நல்ல ராஜா,  இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் என்ற பொல்லாத மனுஷனோடு,  கூடா நட்பு கொண்டு,  அவனுக்குத் துணை நின்று சீரியருக்கு விரோதமாய் யுத்தத்திற்கு கடந்து சென்ற வேளையில்,  எதிரிகளால் சூழ்ந்து கொள்ளப்பட்டான். அப்போது கர்த்தரை நோக்கிப் பயந்து கூக்குரலிட்டான்,  கர்த்தர் அவனுக்கு அநுசாரியிருது,  அவனுடைய உயிரைக் காப்பாற்றினார்.   அதுபோல கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரப் பலியிட்டு,  பொருத்தனைகளைச் செலுத்தும் போது,  நம்முடைய ஆபத்து வேளையில் கர்த்தர் நமக்கு தீவிரித்து வந்து உதவிசெய்வார்,  நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *