அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்(சங்கீதம் 107:20).
இந்த உலகத்தில் எத்தனையோ மருத்துவக் கண்டுபிடிப்புகளும் மருந்துகளும் இருக்கிறது. இருந்தாலும் எல்லா மருந்துகளும் ஒரு மனிதனை குணமாக்குவதில்லை, அப்படியே குணமாக்கினாலும் அது தற்சமயம் மாத்திரமே அவனுக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் தருகிறதாயிருக்கிறது. அந்த வியாதிகள் திரும்பவும் அவனுக்குள் வரும்போழுது அவன் சோர்ந்துபோகிறான். அல்லது சில நேரங்களில் மரணத்தையும் சந்திக்கிறான். ஆனால் கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது நான் உன்னை குணமாக்குவேன். உனக்கு சகாயம் செய்து இளைப்பாறுதலை தருவேன். ஆம் கர்த்தருடைய வசனம் மட்டும்தான் ஒரு மனிதனை பூரணமாய் குணமாக்கி அவனுக்கு நல்ல ஆறுதலையும், நல்ல இளைப்பாறுதலையும் தரமுடியும். அவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வசனம் ஒவ்வொருவரையும் குணப்படுத்துகிறது, அது கிரியை செய்யாமல் ஒருபோதும் வெறுமையாய் திரும்பினதில்லை(ஏசாயா 55:11) கூறுகிறது.
கர்த்தராகிய ஆண்டவர் பலவிதங்களில் நம்மை குணமாக்குகிறார். அதில் முதலாவது அவருடைய வார்த்தையினால் குணமாகிறோம்.
இயேசு கப்பர்நகூமில் இருந்தபொழுது நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்திலே வந்து ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் அவனை குணமாக்கும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். அதற்கு நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, “ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்”, அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்(மத் 8:7,8) என்றான். கர்த்தர் தம்முடைய வார்த்தையை அனுப்பி அவன் வேலைக்காரனை குணமாக்கினார்.
இரண்டாவது அவருடைய அபிஷேகத்தினால் குணமாகிறோம். இயேசுவின் மேல் கர்த்தருடைய ஆவியானவர் தங்கியிருந்தார். அவர் மேல் இருந்த அபிஷேகம் அநேகரை குணமாக்கியது. முடவர்கள் நடந்தார்கள், குருடர்கள் பார்வையடைந்தார்கள், மரித்தவர்கள் எழுந்தார்கள். அவர் இருதயம் நொறுங்குண்டவர்களையும், நறுங்குண்டவர்களையும் குணமாக்கி, அவர்களுடைய காயங்களைக் கட்டினார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்(அப்10:38)
மூன்றாவது அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். இயேசு தாமே நம்மை அழிவிலிருந்து மீட்கும்படி நமக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்(ஏசாயா 53:5)
நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தரை மட்டும் தேடுங்கள். அவர் உங்கள் காயங்களை கட்டுவார். உங்கள் நோய்களை குணமாக்குவார். கர்த்தருடைய வசனத்திற்கு ஒரு வல்லமையுண்டு. அது உலர்ந்த எலும்புகளையும், ஆத்துமாவையும் உயிர்பிக்ககூடியது. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது(சங்19:7) இந்த வசனம் உங்கள் நாவுகளில் இருந்தால் ஆவியானவர் உங்களை கொண்டும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org