மேய்ப்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைகள்:-

லூக்கா 2 : 8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இயேசு பிறந்ததை முன்னறிந்தவர்களில் ஒரு பிரிவினர் மேய்ப்பர்கள். இவர்களிடம் தேவ தூதன் வந்து இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த மேய்ப்பர்களுக்கு இருந்த சுபாவங்கள் நமக்கும் இருந்தால் நல்லதாயிருக்கும்.

முதலாவது மந்தையை காத்துக்கொள்ளக்கூடிய சுபாவம். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் (லுக் 2 : 8 ). அதுவும் எப்படி மந்தையை காத்துக்கொண்டார்கள் என்று பார்த்தால்; இரவெல்லாம் பார்த்துக்கொண்டார்கள் என்று வசனத்தை படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். நாமும் நம்முடைய மந்தைகளாகிய ஜனங்களை, விசுவாசிகளை காத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பில் காணப்படுகிறோம் என்பதை கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகிற இந்த நாட்களில் விளங்கிக்கொள்ளவேண்டும். யாருக்கு என்ன சம்பவித்தால் எனக்கென்னவென்று இருந்துவிடாமல், ஜெபத்தில் இரவெல்லாம் கர்த்தருடைய இரத்தத்திற்குள் அவர்களை வைத்து காத்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமையாகும்.

இரண்டாவது தீவிரமாய் செயல்பட்டவர்கள். இயேசு பிறந்தார் என்பதை அறிந்தவர்கள் காலம் கடத்தாமல் தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள் (லுக் 2 : 16 ). கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தீவிரமாய் இயேசுவின் ராஜ்யத்தை கட்ட செயல்படுகிறவர்களாக காணப்படவேண்டும் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். நாளைக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியாதவர்களாக காணப்படுகிறோம். இயேசுவின் வருகை எந்நேரமும் காணப்படும் என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆகையால் அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று நேரத்தை வீணடிக்காமல் தீவிரமாய் செயல்படுகிறவர்களை கர்த்தர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மூன்றாவது சுவிசேஷம் சொல்லுகிறவர்களாய் காணப்பட்டார்கள். அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (லுக் 2 : 16 ). அவர்கள் அறிந்த நற்செய்தியை கேட்டு அவர்கள் பயனடைந்ததை போல மற்றவர்களும் பயன்பெறவேண்டுமென்று இந்த சங்கதியை பிரசித்தம்பண்ணினார்கள். இயேசு அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அறிவிக்கப்படுவதை தவிர்த்து, பிரசங்கிக்கப்படாத இடத்தில் இயேசு பிரசங்கிக்கப்பட செயலாற்றவேண்டும், செயல்பட வேண்டும். இயேசுவை குறித்த சங்கதியை ஒவ்வொருநாளும் மற்றவர்களுக்கு சொல்லுகிறவர்களாக நாம் காணப்படவேண்டும். அன்று இயேசுவின் பிறப்பை எப்படி இந்த மேய்ப்பர்கள் கொண்டாடினார்கள். அந்த செய்தியை பிரசித்தம்பண்ணி கொண்டாடினார்கள். அதுபோல அவர் இரட்சகராக, ஒவ்வொருவருடைய பாவத்தையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி பிறந்தார் என்ற சங்கதியை மற்றவர்களுக்கு சொல்லி கொண்டாடினால் அது கர்த்தருக்கு உகந்ததாயிருக்கும்.

நான்காவதாக அவர்கள் துதிக்கின்ற சுபாவம் உடையவர்களாய் காணப்பட்டார்கள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள் (லுக் 2 : 20 ). துதித்தால் சாத்தானின் கோட்டைகள் தகர்க்கப்படும்; துதித்தால் சந்துருவின் வல்லமைகளை செயலிழந்து போகும் என்பதை கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். எதிரிகளை எதிர்த்து யார் முன்செல்லவேண்டுமென்று அன்று ஜனங்கள் கேட்டபோது, ஆண்டவர் சொன்னார் யூதா எழுந்து முன்செல்லக்கடவன் என்பதாக. ஏனென்றால் யூதா துதிக்கின்ற கோத்திரம். அந்த கோத்திரத்தில் தான் இயேசுவும் வந்தார். அப்படிப்பட்ட துதிக்கின்ற சுபாவம் நாமெல்லாருக்கும் காணப்படவேண்டும். இயேசுவின் பிறப்பை அந்த தூதன் சொன்ன அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

இப்படிப்பட்ட சுபாவங்களை நாமும் உடையவர்களாய் இருந்தால் கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்ற ஜனங்களை இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *