இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். (Great is the Holy One of Israel in your midst).

சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி, இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். (ஏசாயா 12:6).

உங்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள். 2021-வது வருஷம் முழுவதும் கர்த்தர் எல்லா நன்மைகளையும் தந்து உங்களை ஆசீர்வதிக்கும் படிக்கு ஜெபிக்கிறேன்.

புதிய வருடத்தில் இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் நடுவில் பெரியவராயிருந்து உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்வார். இந்த வசனம் சீயோனில் வாசமாயிருக்கிறவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்த சீயோன் என்று சொல்லப்பட்டார்கள் (ஏசா.60:14). இன்று ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் காணப்படுகிற கர்த்தருடைய ஜனங்களாகிய நீங்கள் கர்த்தருடைய சீயோனாய் காணப்படுகிறீர்கள். நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், ப10ரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்,  ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்(எபி. 12:22) என்று உங்களைப் பற்றி வேதம் கூறுகிறது. அதுபோல, பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய ஆலயம் காணப்பட்ட எருசலேம் நகரம் கர்த்தருடைய சீயோனாய் காணப்பட்டது. பாபிலோன் ஆறுகள் அருகே அமர்ந்து சீயோனை நினைத்து இஸ்ரவேல் ஜனங்கள் அழுதார்கள். இந்நாட்களில் மணவாட்டி சபையும் கூட கர்த்தருடைய சீயோனாய் காணப்படுகிறது. சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் காணப்படுகிற சபை, கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிற சபை கர்த்தருடைய சீயோனாய் காணப்படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் வாசம் செய்கிறவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்த வசனமாய் காணப்படுகிறது.

அப்படிப்பட்டவர்களாகிய உங்களைப்பார்த்து நீங்கள் சத்தமிட்டு கெம்பீரித்து சந்தோஷப்படுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு இரண்டு காரணங்களையும் கர்த்தர் கூறுகிறார். முதலாவது அவருடைய கோபம் உங்களை விட்டு நீங்கிற்று(ஏசாயா 12:1). 2020-வது வருஷம் கர்த்தருடைய கோபம் பல விதங்களில் வெளிப்பட்டிருக்கக் கூடும், கொள்ளை நோய்கள், வேலையிழப்புகள், கைகளின் பிரயாசங்களில் தடைகள், சிறையிருப்புகள், சபைகள் மூடப்பட்ட நிலைமைகள்  என்று பல கடினமான பாதைகளில் வழியாக நீங்கள் கடந்து சென்றிருக்கக் கூடும். அவருடைய நாமம் தரித்திருக்கிற நாம் நம்மைத் தாழ்த்தாததின் நிமித்தம், நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு விலகாததினால் தேசத்தில் ஷேமம் காணப்படாமல், அழிவுகள் வந்தது. ஆனால் நம்முடைய தேவன் எப்போதும் கோபமாயிருப்பதில்லை (ஏசா.57:16), அவருடைய கோபம் ஒரு நிமிஷம், தயையோ நீடிய வாழ்வு என்று வேதம் கூறுகிறது. 2021-வது வருஷம் அவருடைய வார்த்தையின் படி. அவருடைய கோபத்தை நம்மை விட்டு விலக்கி, கர்த்தர் நம்மைத் தேற்றுவார். அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற உங்களை விடுவிப்பார்.

இரண்டாவது, அவருடைய கோபம் நம்மை விட்டு விலகும் போது, இஸ்ரவேலின் பரிசுத்த தேவன் உங்கள் நடுவில் பெரியவராய் வெளிப்படுவார். நாம் ஆராதிக்கிறவர் மகா பரிசுத்தமுள்ள தேவன். அவருடைய சுபாவங்களில் முதன்மையானதும் மேன்மையானதும் பரிசுத்தமாய் காணப்படுகிறது. 2021-ல் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரிப்பதற்கு கர்த்தர் பரிசுத்தர் என்ற தரிசனம் நமக்குள்ளாய் காணப்படவேண்டும். வேதத்தில் இரட்சிப்பு ஒன்று தான் நிபந்தனையற்ற ஈவு, காரணம் அதற்குரிய விலையை கல்வாரிச் சிலுவையில் இயேசு ஏற்கனவே செலுத்தினார். மற்ற ஆசீர்வாதங்கள் எல்லாம் நிபந்தனையோடு கூடியதாகக் காணப்படுகிறது. 2021-ம் ஆண்டு நம்மைப் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும், பரிசுத்தமாய் ஜீவிப்பேன் என்ற தீர்மானத்தை நாம் எடுக்கவேண்டும். ஏசாயா தீர்க்கன் கண்ட பரலோக தரிசனத்திலும் (ஏசா. 6:3), அப்போஸ்தலனாகிய யோவான் பத்மூ தீவில் காணப்பட்ட வேளையில் கண்ட  பரலோக தரிசனத்திலும் (வெளி. 4:3) நம்முடைய தேவன் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் குறித்து நாம் அறிகிறோம். ஆகையால்,  பரிசுத்தக் குலைச்சல் உண்டுபண்ணுகிற எல்லாக் காரியங்களையும் நம்மை விட்டு, 2021-வது வருஷமும், எஞ்சிய நம் வாழ்நாட்களிலும் அப்புறப்படுத்த வேண்டும். அப்போது பரிசுத்த தேவன் உங்கள் நடுவில் உலாவி உங்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்வார். அவர் நம் நடுவில் வாசம் பண்ணுகிறார் என்பதே நமக்குக் கிடைத்த பாக்கியமாய் காணப்படுகிறது. அண்ட சராசரங்களைச் சிருஷ்டித்தவர் சாதாரண மனுஷர்கள் மத்தியில் வாசம் பண்ணுவது மகா மேன்மையான அனுபவமாகக் காணப்படுகிறது. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் (லேவி. 26:12) என்பதும், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறீர்களோ, அங்கே உஙகள்; நடுவிலே இருக்கிறேன் என்பதும் அவருடைய வார்த்தையாய் காணப்படுகிறது. அவர் உங்கள் நடுவில் உலாவும் போது, உங்கள் ஆக்கினைகளை அகற்றுவார்,  உங்கள் சத்துருக்களை விலக்குவார், நீங்கள் தீங்கைக் காணாதிருக்கும்படிக்குச் செய்வார், உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பார் (செப். 3:15-20).  அவர் மகா பெரிய தேவன், வானாதி வானங்ககளும் கொள்ளாதவர். உங்கள் மேல் கொண்ட அவருடைய நினைவுகள் மகா பெரியது. உங்களைக் குறித்து அவர் கொண்டிருக்கிற திட்டங்கள் பெரியது. 2021-வது வருஷம் கர்த்தர் உங்களுக்குப் பெரியக் காரியங்களைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *