சங்கீதம் 9:19 எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
சில வேளைகளில் மனிதர்கள் மூலமாக அநேக நெருக்கடிகளும் உபத்திரவங்களும் நாம் சந்திக்கக்கூடும். தாவீதும் அப்படிதான் மனிதர்கள் மூலமாக அநேக உபாத்திரவத்தின் பாதையில் அவன் கடந்து சென்றான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது சொல்கிறான் எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும் என்பதாக.
சபைக்கு விரோதமாக செயல்படுகிற சத்துருக்களுக்கு சரிக்கட்ட ஆண்டவர் எழுந்தருளுகிறவர். அவர் எழுந்தருளும்போது சத்துருக்கள் சிதறடிக்கப்பட்டுப்போவார்கள் என்று மோசே பக்தன் கூட சொல்பவனாக காணப்படுகிறான். பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான் (எண் 10 : 35 ).
மாத்திரமல்ல தாவீது இன்னும் சொல்லுகிறான் கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர் என்பதாக, கர்த்தர் அவனுக்கு விரோதமாக செயல்பட்டவர்களுடைய பற்களை தகர்த்துப்போட்டார் என்று அவன் சொல்லுகிறவனாக காணப்படுகிறான்.
எதை வேண்டுமானாலும் கர்த்தர் பொறுத்துக்கொள்ளுவார் என்று சிலர் எண்ணக்கூடும்; ஆனால் சபைக்கு விரோதமாக வருகிற ஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் செய்ய எழுந்தருளுகிற தேவன் அவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ரத்தம் சிந்தி சம்பாதித்த உங்களுக்காக / சபைக்காக அவர் எழுந்தருளுவார். தன்னுடய ஸ்தானத்தில் அதாவது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற தேவன் சபைக்கு ஒரு ஆபத்து வருகிறதென்றால் அவர் எழுந்தருளுவார்; பதில் செய்வார்; நியாயம் விசாரிப்பார்; நீதி செய்வார்; சீயோனுக்கு இரங்குவார் என்பதில் சந்தேகமில்லை.
சங்கீதம் 66:12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர் என்ற வசனத்தின்படி மனிதர்கள் கொடுக்கும் உபாத்திரவத்திற்கு பின்பு செழிப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தர் உங்களுக்காக எழுந்தருளுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org