வெளி 4 : 6-8. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
சேராபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலும், கேரூபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு கீழும், இந்த நான்கு ஜீவன்கள் சிங்காசனத்தில் மத்தியிலும் காணப்படுகின்றன. எசேக்கியேல் கேரூபீன்களை பார்த்தபோது அவர்களுக்கு மனிதன், சிங்கம், எருது, கழுகு என்ற நான்கு முகத்துடன் காணப்பட்டன என்பதை கண்டுகொண்டான். இந்த நான்கு ஜீவன்களுக்கும் நான்கு முகங்களில் மூன்று, கேரூபீன்களில் இருந்த முகங்களே. நான்காவது முகம் மட்டும் எருதுக்கு பதிலாக காளையின் முகம்.
சேராபீன்களை போல இந்த நான்கு ஜீவன்களும் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று தேவனை சத்தமிட்டு ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நான்கு ஜீவன்கள் நம்முடைய ஜெபங்களை தேவனிடம் கொண்டுசெல்பவர்களாய் காணப்படுகிறார்கள். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து (வெளி 5 : 8 ):
இந்த தேவ தூதர்கள் வெறும்கையோடு இல்லை என்பதை பார்க்கலாம். ஒரு கையில் சுரமண்டலம், இன்னொரு கையில் பரிசுத்தவான்களின் ஜெபம் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருமுறை ஜெபத்தை நீங்கள் ஏறெடுக்கும்போதும் அந்த ஜெபத்தை கலசத்தில் சேகரித்து வைத்துவிட்டு அதை தேவனிடம் கொண்டு செல்லுகிறார்கள். ஆகையால் உங்கள் ஜெபங்கள் கீழே விழுந்துவிட்டது, தேவன் மறந்துவிட்டார் என்று எண்ணாதிருங்கள். கண்ணீரை துருத்தியில் வைத்திருக்கிற தேவன். எப்பொழுதும் ஜெபத்திற்கு பதில் தருகிற தேவன். உங்களுக்கென்று வைத்திருக்கிற துருத்தியில் உங்கள் ஜெபங்களெல்லாம் சேகரித்து நிறையும்படி தேசத்திற்காக, எழுப்புதலுக்காக, அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கும்படி உங்கள் ஜெபத்தை கூட்டுங்கள். உங்கள் பொற்கலசங்கள் நிறையட்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org