என்றுமுள்ள கர்த்தருடைய கிருபை!

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங்கீதம் 136:1).

சங்கீதம் 136 ஒரு விஷேசித்த சங்கீதம். “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற வார்த்ததை 26 வசனங்களிலும் திரும்பத் திரும்ப வருகிறது. வேதத்தில் ஒரு வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது என்றால் நாம் அதைக் கவனிக்கவேண்டும். இயேசு சில முக்கியமான காரியங்களைப் போதிக்கும் போது,மெய்யாகவே, மெய்யாகவே என்று திரும்பச் சொல்லுகிறதைப் பார்க்கமுடியும். யோவா-3:3ல் இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்  தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  அதுபோல யோவா-3:5ல் இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று கூறினார். ஆகையால் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும்  பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும், அதில் பிரவேசிக்கவும் முடியாது. சங்கீதம் 136ல் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று வருவதை யாரெல்லாம் கூறவேண்டும் என்று  சங்கீதம் 118:2-4 வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.  அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்லவேண்டும், ஆரோனின் குடும்பத்தார் சொல்லவேண்டும், கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்லவேண்டும். ஆகையால் இந்நாட்களில் காணப்படுகிற கர்த்தருடைய பிள்ளைகள், ஊழியக்காரர்கள்,அவருக்குப் பயப்படுகிற அத்தனை பேரும் கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது  சொல்லவேண்டும் என்பதாய் காணப்படுகிறது.

யூதர்களுடைய துதி ஆராதனை வேளைகளில் இதைப் பாடலாகப் பாடி தேவனை மகிமைப் படுத்துவார்கள். சாலோமோன் கட்டின தேவாலய பிரதிஷ்டையின் வேளையில், ஆசாரியர்களும், லேவியர்களும் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாயக்; கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடி கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையில், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறைந்தது.  அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று என்று 2 நாளா. 5:13-14ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி கர்த்தரைத் துதித்து ஆராதித்த போது கர்த்தர் அதை அங்கீகரித்து அவருடைய பிரசன்னத்தினால் ஆலயத்தை நிரப்புகிறதைப் பார்க்கமுடிகிறது.

யோசபாத்தின் அரசாட்சியின் நாட்களில் மோவாப் புத்திரரும்,அம்மோன் புத்திரரும்,அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட அவனுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணப் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.  அப்போது யோசபாத் பயந்து, எங்கள் தேவனே,அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று வேண்டுதல் செய்தான். கர்த்தருடைய ஆவியானவருடைய ஆலோசனையின் பேரில்,அவன் ஜனத்தோடே ஆலோசனை பண்ணி, பரிசுத்தமுள்ள தேவனைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய்,கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும்,மோவாபியரையும்,சேயீர் மலைத் தேசத்தாரையும்,ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் என்று 2 நாளாகமம் 20:21-22ல் எழுதப்பட்டிருக்கிறது.  அவர்கள்  பெராக்காவிலே கூடி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது, என்று அவர் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்து, அவருடைய கிருபைகளையும்,இரக்கத்தையும் உணர்ந்து துதிக்கும் போது, தேவப்பிரசன்னம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நிரப்பும்,    உங்கள் குடும்ப வாழ்க்கையை நிரப்பும், ஆலயக் கூடுகைகளில் அவருடைய பிரசன்னம் அளவில்லாமல் வெளிப்படும்.  அதுபோல உங்களுக்கு விரோதமாய், குடும்பங்களுக்கு விரோதமாய், ஊழியங்களுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா சத்துருக்களின் கிரியைகளையும் கர்த்தர் அழிப்பார். உங்களுக்காகக் கர்த்தர் யுத்தம் பண்ணுவார். உங்களை பெராக்காவில் கூடி கர்த்தர் கொடுத்த  வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடும்படிச் செய்வார்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *