அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார் (2 நாளா. 1:7).
தாவீது ராஜா தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். அவனுக்குக் காத்தர் தரிசனத்தில் தோன்றி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று ஆச்சரியமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். கர்த்தர் அவருடைய பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர். அவருடைய சித்தத்தின்படி எதைக்கேட்டாலும் செய்கிறவர். என் நாமத்தினாலே எதைக்கேட்டாலும் பெற்றுக்கொள்வீர்கள் என்பது கர்த்தருடைய வாக்காய் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட நல்வார்த்தையை சாலொமோனுக்கு கர்த்தர் கொடுத்ததின் காரணம், சாலொமோனும், இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கிபியோனிலிருந்த கர்த்தருடைய தாசனாகிய மோசே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உண்டுபண்ணின ஆசரிப்புக் கூடாரத்தை நாடிப் போனார்கள். அங்கே பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் இருந்தது. கர்த்தருடைய சமூகத்தை நாடி வாஞ்சையோடு சென்று, அங்கே ஆயிரம் சர்வாங்க தகனபலியைச் செலுத்திப் பலியிட்டார்கள். கர்த்தருடைய பிள்ளையே கர்த்தருடைய சமூகத்தை வாஞ்சையோடு தேடுங்கள்,உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலிகளைக் கர்த்தருக்கு எப்பொழும் செலுத்துங்கள்,இடைவிடாமல் ஸ்தோத்திர பலிகளையும் நன்றி பலிகளையும் ஏறெடுங்கள். கர்த்தர் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார். அன்னாள் பிள்ளையில்லாமல் காணப்பட்ட வேளையில் கர்த்தருடைய ஆலயத்தை நாடிச் சென்றாள். கர்த்தர் அவள் மன விருப்பத்தை நிறைவேற்றினார். அவளுடைய நிந்தையைப் புரட்டிப்போட்டார்.
சாலொமோன் விரும்புகிறதைக் கேட்கக் கர்த்தர் கூறின வேளையில், அவன் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்@ ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான். சாலொமோன் கேட்ட இந்தக் காரியம் ஆண்டவருடைய பார்வைக்கு மிகுந்த உகந்த விண்ணப்பமாயிருந்தது. நம்முடைய விண்ணப்பங்கள் கர்த்தருடைய பார்வையில் உகந்ததாகக் கூட காணப்படவேண்டும். அவ்வண்ணம் காணப்படும் போது கர்த்தர் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவார். அவருடைய நாமத்தின் மகிமைக்காய்,அவருடைய ஜனங்களுக்காக நாம் கேட்கிற அத்தனைக் காரியங்களையும் தருகிற தேவன் அவர். கர்த்தர் அவனுக்கு ஞானத்தை மாத்திரமல்ல,அதோடு உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றும் வாக்களித்தார். சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்@ அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது@ பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்@ அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும்,அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். அவன் எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும்,கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். அவனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக எண்ணப்படவில்லை, அவ்வண்ணமாகக் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
தேவனுடைய ராஜ்யத்திற்கும் அவருடைய நீதிக்கும் உரியதைத் தேடுங்கள். அவர் சமூகத்தை வாஞ்சையோடு நாடுங்கள். துதி, ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள். நம்முடைய வேண்டுதல்கள் கர்த்தருக்கு உரியதாகவும் அவரை பிரியப்படுத்துகிறதாயும் காணட்டும். அப்போது கர்த்தர் உங்கள் மன விருப்பங்களைத் தந்து ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org