ஆதி 3:6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
புசிக்கக்கூடாது என்று சொன்ன கனியை புசிக்கும்படி சர்ப்பம் ஆதி பெற்றோர்களை வஞ்சித்து அவர்கள் பாவத்தில் விழும்படி செய்தது. ஆயிரக்கணக்கான கனிகள் அந்த தோட்டத்தில் இருந்த போதிலும் மனிதன் நன்மை தீமை அறியக்கூடிய கனிகளை புசித்ததால், அவர்கள் இருவரும் நிர்வாணிகளாகிப்போனார்கள்.
இவ்வாறு தான் நாமும் கூட அநேக வேளைகளில் ஆண்டவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல், நம்முடைய சுயத்திற்கு சோதனைகள் வரும்போது நாமாக முடிவெடுத்துவிடுகிறோம். ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபட்டு பாவத்தை சம்பாதித்துக்கொள்ளுகிறோம்.
இயேசு பேதுருவிடம் சொன்னார், பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். (லுக் 22:31). ஆண்டவர் எப்படி பேதுருவை சோதிக்கும்படி சாத்தானுக்கு அனுமதிக்கொடுத்தாரோ, அதேபோல தான் ஆதாமை சோதிக்கும்படியாக கர்த்தர் சாத்தானை அனுமதித்தார். இயேசு பேதுருவிடம் சொன்னார் நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் என்பதாக. பேதுரு தன்னுடைய சோதனையில் விழுந்துபோக கூடாது என்பதாக இயேசு ஜெபிக்கவில்லை; மாறாக, அவன் விழுந்தாலும் கர்த்தர் அவன் மீது அன்பாய் இருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளும்படியாக அவனுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு ஜெபித்தார்.
உங்களுடைய வாழ்க்கையிலும் இப்படி அநேக சோதனைகளை தாண்டி வரும்போது ஒரு வேளை விழுந்திருப்பீர்களென்றால், இன்னும் இயேசு உங்கள் மீது அன்பாக இருக்கிறார் என்ற விசுவாசம் உங்களுக்கு காணப்பட வேண்டும்.ஒருவேளை உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாமலிருந்தாலும், உங்கள் விருப்பம் நிறைவேறாமலிருந்தாலும், யோபு கடந்து சென்ற கடினமான பாதையில் கடந்து சென்றாலும், வாழ்க்கையில் நஷ்டங்கள் வந்தாலும், இயேசு உங்கள் மீது அன்பாயிருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்.
புசிக்க கூடாது என்று சொன்ன கனி பார்ப்பதற்கு அழகாக காணப்பட்டது. ஆண்டவர் தான் அந்த கனியை அழகாக படைத்தார் ஏனென்றால் அப்பொழுது தான் ஆதாமும் ஏவாளும் தான் படைத்த அழகான கனியை பார்க்கிலும் அவர்கள் என்னை நேசிக்கிறார்களா என்பதை சோதித்தறியமுடியும். நம்முடைய எல்லா சோதனைகளிலும் படைக்கப்பட்டதை பார்க்கிலும் படைத்தவரை நாம் அதிகமாக நோக்கி பார்க்கவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு வரும் சோதனை அழகான பெண்ணாக இருக்கலாம், அழகான ஆணாக இருக்கலாம், பொன்னாக இருக்கலாம், விலையுயர்ந்த பொருள்களாயிருக்கலாம், எப்படியாக இருந்தாலும் எல்லாவற்றை காட்டிலும் நம்முடைய கண்கள் படைத்தவரையே நோக்குகிறதாக காணப்பட வேண்டும். ஆதாமும் ஏவாளும் படைத்தவரை நோக்குவதிலிருந்து தவறி சந்துருவின் பேச்சை கேட்டுவிட்டார்கள்.
ஆனாலும் கர்த்தர் உண்மையில்லாதவர்களுக்கும் உண்மையுள்ளவர். கர்த்தர் சர்ப்பத்தை சபித்துவிட்டு முடிவில் என்ன செய்தார் தெரியுமா? ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாயிருக்கிறார்களென்று ஒரு மிருகத்தை அடித்து அவர்களுக்கு தோல் உடைகளை செய்து அவர்கள் நிர்வாணத்தை மூடினார். வேதத்தில் எழுதப்பட்ட முதல் மரணம் இந்த அடிக்கப்பட்ட மிருகம். அதேபோலத்தான் நம்முடைய ஒவ்வொருவருடைய பாவத்தினிமித்தம் வரும் நிர்வாணத்தை மூடும்படியாக அந்த மிருகம் அடிக்கப்பட்டதைப்போல இயேசுவும் சிலுவையில் அடிக்கப்பட்டார்; அவர் அடிக்கப்பட்டதினால் நம்மை இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தினால் நம் நிர்வாணத்தை அவர் மூடினார்.
ஆதாமை போல சந்துருவின் சத்தத்திற்கு செவிகொடாமல் இருக்கும்படியாக கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். வஞ்சிக்கிற ஆவியை கண்டறிந்து, அதற்கு விலகி ஓடும்படியாக கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆவிகளை பகுத்தறியும் அறிவை கொடுப்பராக.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org