இருக்கிறவராக இருக்கிறேன்.

மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால்,நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார் (யாத். 3:13,14).

 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில், பார்வோன் அவர்களை அதிகமாய் வேலை வாங்கி, அவர்கள் ஜீவனையே கசப்பாக்கினான்.  இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். அப்போது கர்த்தர் அவர்களை விடுவிக்கும் படிக்குச் சித்தம் கொண்டார். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை அந்தப் பணிக்குக் கர்த்தர் தெரிந்துகொண்டார்.  கர்த்தர் தன்னுடைய பணிகளைச் செய்வதற்கு உண்மையுள்ள பாத்திரங்களை இன்றும்  தேடுகிறார். தேசங்களுக்காக, அதின் குடிகளுக்காகத் திறப்பிலே நிற்க ஒரு மனிதனைத் தேடுகிறார். அப்படிப்பட்ட பாத்திரங்களாய் நாம் காணப்படுவது பாக்கியமானது.

மோசே தேவனை நோக்கி, நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்று கேட்ட வேளையில், இருக்கிறவராக இருக்கிறேன் என்று சொல் என மோசேயுடனே கூறினார். நான் நித்தியமாய் நிலைத்திருக்கிறவர், நான் மாறாதவர், நான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ அதைச் செய்வேன், என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அவர் அல்பா ஒமேகா.  அவரால் எல்லாம் கூடும். அவர் உங்களுக்கு உதவி செய்வதற்கு ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். உங்கள் நெருக்கங்கள் எதுவாய் இருந்தாலும்,  நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும் போது உங்களை விடுவித்து தப்புவிக்க வல்லவர். தாவீது நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட வேளையில் அவனைக் கேட்டருளி விசாலத்தில் வைத்தவர், உங்கள் நெருக்கங்களையும் மாற்றி விசாலத்தில் வைத்து, உங்களை உயர்த்துவார்.

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே அவருக்குப் பண்டிகை கொண்டாடும்படி ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்ற வேளையில், பார்வோன், நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன், நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்.  அவர் யார்? என்று கேட்ட பார்வோனுக்கு தன்னை யார் என்று வெளிப்படுத்துவதற்காகவே பத்து வாதைகளைக் கட்டளையிட்டார், எகிப்தின் தலைச்சன்களையெல்லாம் அடித்து தன் வல்லமையை வெளிப்படுத்தி, பலத்த கையோடும் ஓங்கியப் புயத்தோடும் அவர்களை விடுவித்தார். கடைசியில் தன்னை யார் என்று கேட்ட பார்வோனையும் அவன் சேனையையும் செங்கடலில் அமிழ்த்தி, அவர்கள் மேல் வெற்றிச்சிறந்து, மகிமைப்பட்டார்.  உங்களைப் பகைக்கிறவர்கள், உங்களுக்கு விரோதமாய் சத்துருவால் தூண்டிவிடப்படுகிறவர்கள், உங்கள் தேவன் யார்? எனறு கேட்கலாம். கர்த்தர் அவர்கள் மேல் மகிமைப்பட்டு, உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் நாள் வந்துவிட்டது. மோசேக்கு இருக்கிறவராய் இருக்கிறேன் என்று தன்னை வெளிப்படுத்தி அவரோடு இருந்தவர், என்றும் உங்களோடு இருப்பார். உலகத்தின் முடிவு பரியந்தம் சதாகாலங்களிலும் உங்களோடு கூட இருந்து, கைவிடாமல் நடத்துவார். கவலைப்படாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *