மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார், நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் (மீகா. 6:8).
கர்த்தருடைய ஜனங்களுக்குள்ளாக அனேக வேளைகளில் எழும்புகிற ஒரு கேள்வி, கர்த்தர் என்னிடத்திலிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறார். கர்த்தரை இன்னும் பிரியப்படுத்துவது எப்படி, அவருக்கு உகந்ததைச் செய்வது எப்படி என்ற எண்ணங்களும் நமக்குள் எழும்புவது உண்டு. மீகா தீர்க்கதரிசியின் மூலம் அதற்குரிய பதிலை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் கர்த்தர் கொடுக்கிறதைப் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் அறியமுடிகிறது. மூன்று காரியங்களைச் செய்யும்படிக்குக் கர்த்தர் நமக்கு அறிவித்திருக்கிறார்.
முதலாவது நியாயத்தைச் செய்யுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். உண்மையோடும், உத்தமத்தோடும், நேர்மையோடும் எல்லா காரியங்களையும் செய்வது என்பது அதின் பொருளாகக் காணப்படுகிறது. குறிப்பாக நியாயம் கிடைக்காத ஏழைகள், அனாதைகள், விதவைகள், அந்நியர்கள், பலகீனமானவர்கள், ஒடுக்கப்படுகிறவர்களுக்கு நீதியைச் செய்யவேண்டும் என்பதாகவும் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, கறைபட்டுப் போன சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் தரித்திரர்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு நீதியும் நியாயமும் மறுக்கப்படுகிறது. நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக (உபா. 16:20) என்று முற்பிதாக்களுக்கு கட்டளையிட்ட தேவன் நாமும் அப்படியே நீதியைப் பின்பற்றுகிறவர்களாய் காணப்படவேண்டும் என்று விரும்புகிறார். உலகத்தின் குடிகள், கர்த்தரை அறியாதவர்கள் அநீதி செய்கிறவர்களாய் காணப்பட்டாலும் கர்த்தரை அறிந்த ஜனங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.
இரண்டாவது இரக்கத்தை சிநேகியுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் என்றும் வேதம் கூறுகிறது. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத். 5:7) என்றும் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குப் பிறன் யார்? என்று கேட்டவனிடம் ஆண்டவர் கூறின உவமையில், ஒருவன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அந்த வழியே வந்து ஆசாரியனும், லேவியனும், அவனைக் கண்டு விலகிப்போனார்கள். ஆனால் அங்கு வந்த சமாரியன், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெய்யும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். ஆகையால் இரக்கஞ்செய்த சமாரியனே அவனுக்குப் பிறனாய் காணப்பட்டதைப் போலக் கர்த்தருடைய பிள்ளைகளும் இயேசுவின் மனதுருக்கம் கொண்டவர்களாய் மற்றவர்களுக்கு இரக்கஞ் செய்யவேண்டும். கர்த்தர் நமக்கு இரக்கம் பாராட்டி நன்மைகள் செய்தது போல, நாமும் மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டுவோம்.
மூன்றாவதாகக் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதையும் கர்த்தர் அவருடைய ஜனங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார். பெருமைகளோடும், மன மேட்டிமைகளோடும் காணப்படுகிறவர்கள் நடுவில் கர்த்தருடைய பிள்ளைகள் தாழ்மையோடு வாழவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன், என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் கூறினார். கர்த்தருடைய சிந்தையைத் தரித்த அத்தனைப் பேரும் மனத்தாழ்மையோடு ஜீவிக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும். நம்முடைய மேன்மைகள் எல்லாம் ஆண்டவருடைய சிலுவையாய் காணப்படுகிறது. முதல் பாவம் மன மேட்டிமையினால் வந்தது. பிசாசு தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தினான், தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலாக ஏறுவேன் என்று மனமேட்டிமை கொண்டான். ஆகையால் கர்த்தர் அவனைக் கீழே தள்ளினார். அதே மேட்டிமையை ஏவாளுக்குள் விதைத்தான், விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளிலே தேவர்களைப் போல மாறுவாய் என்ற மேட்டிமையின் விதையை அவளுக்குள் விதைத்ததினால் மனுகுலத்திற்குள் முதலாவது பாவம் வந்தது. கர்த்தருடைய பிள்ளைகள் தாழ்மையோடு ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் கிருபைகளை அழிக்கிறார், தன்னைத்தான் தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிற தேவன் அவர்.
மேற்குறிப்பிட்ட மூன்று காரியங்களைக் கர்த்தர் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார். அவைகளை நாம் செய்யும் போது கர்த்தர் நன்மையான ஈவுகளை உங்கள் வாழ்க்கையில் கட்டளையிட்டு உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org