திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்,அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவான் 10:10).
பரிபூரணம் என்பது கிறிஸ்துவில் நமக்குக் காணப்படுகிற நிறைவான,மகிழ்ச்சியான வாழ்வைக் குறிக்கிறது. நாம் நினைப்பதற்கு எண்ணுவதற்கும் மேலாய் கிறிஸ்துவுக்குள் காணப்படுகிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகக் காணப்படுகிறது. தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று (1கொரி.2:9) வேதம் கூறுகிறது. அது பரலோகத்தில் ஆண்டவரோடு காணப்படுகிற அழிவில்லாத உன்னதமான வாழ்வைக் குறிக்கிறது. நித்திய ஜீவனை உங்களுக்கு அளிப்பேன் என்பதே கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம். உலகில் காணப்படுகிற எந்த நன்மைகளும் நித்திய ஜீவனுக்கு ஒப்பானது அல்ல. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றும் ஆண்டவர் கூறினார். இப்பூமிக்குரிய ஜீவியமானது நித்தியத்திற்குரியவற்றைத் தேடுவதற்குக் கர்த்தர் கிருபையாய் கொடுத்த தற்காலிக, நிரந்தரமில்லாத நாட்களாய் காணப்படுகிறது என்பதைக் கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
ஆண்டவருடைய ஊழியத்தின் நாட்களில் நியாய சாஸ்திரி ஒருவன் வந்து, போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு, நியாயப் பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக,உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து,உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். இயேசு அவனை நோக்கி அப்படியே செய்,அப்பொழுது பிழைப்பாய் என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே, பரிபூரண ஜீவனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு, மற்ற எல்லாவற்றைப் பார்க்கிலும் கர்த்தரிடத்தில் அன்பு கூருங்கள். அதுபோல அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களிடத்தில் அன்பு கூர்ந்து, அவர்களையும் நித்திய ஜீவனின் பாத்திரங்களாக மாற்றுவதற்குக் கர்த்தருடைய சுவிஷேசத்தை அறிவியுங்கள். ஒன்றான மெய்த்தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் மூலமாய் அன்றி ஒருவரும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியாது. என் வசனத்தைக் கேட்டு,என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும்,என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்றும் கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட வசனம் வேறொருவனைக் குறித்தும் கூறுகிறது. அவன் திருடனாகிய பொல்லாத பிசாசு. அவன் ஜனங்களுடைய சமாதானத்தைத் திருடுகிறவன், சந்தோஷத்தைத் திருடுகிறவன், ஆரோக்கியத்தைத் திருடுகிறவன். கர்த்தரில் காணப்படுகிற நிறைவான,மகிழ்ச்சியான வாழ்வைத் திருடுகிறவன். எல்லாவற்றிற்கும் மேலாக ஜனங்கள் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கக் கூடாதபடி தடைசெய்கிறவன். கர்த்தர் மனுகுலத்திற்குச் சிலுவையின் மூலமாய் சம்பாதித்து ஈந்த பரிபூரண வாழ்வைக் கண்டுகொள்ளக் கூடாதபடிக்கு ஜனங்களுடைய மனக் கண்களைக் குருடாக்குகிறவன். அப்போஸ்தலனாகிய பவுலுடைய முதல் மிஷனரி பயணத்தில் செர்கியுபவுல் என்ற விவேகமுள்ள அதிபதியொருவன் கர்த்தருடைய சுவிஷேசத்தைக் கேட்கவும், விசுவாசிக்கவும் ஆயத்தமாய்க் காணப்பட்டான். ஆனால் பர்யேசு என்ற அழைக்கப்பட்ட எலிமா என்ற மாயவித்தைக்காரன் பிசாசின் மூலம் தூண்டப்பட்டு அதற்குத் தடையாகக் காணப்பட்டான் என்று அப். 13:6-12ல் எழுதப்பட்டிருக்கிறது. பிசாசைப் பலவான் என்றும் வேதம் அழைக்கிறது. அவன் தன்னுடைய ஆளுகையின் கீழ்க் காணப்படுகிறவர்களை எளிதில் சுவிஷேசத்தை ஏற்றுக்கொள்ள விடுவதில்லை, மாறாக சுவிஷேசத்தின் பகைஞராக மாற்றிவிடுவான். ஆகையால் தான் அவனை முந்திக்கட்டினாலொளிய அவனுடைய ஆளுகையின் கீழ்க் காணப்படுகிறவர்களை ஜனங்களை விடுவிக்க முடியாது.
கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தர் நமக்காய் வைத்திருக்கிற பரிபூரண நித்திய வாழ்வை வாஞ்சிக்க வேண்டும். அதற்காய் நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள வேண்டும். அதேவேளையில் சிலருக்கு இரக்கம் பாராட்டி,சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு,பயத்தோடே இரட்சித்து (யூதா 1:22) பரிபூரண வாழ்வின் பாத்திரங்களாக மாற்றுகிறவர்களாகவும் காணப்பட வேண்டும். அதற்குரிய கிருபைகளைக் கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org