நெருப்பை மூட்டி விரியன் பாம்பின் கிரியையை அழியுங்கள்.

பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன் பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான் (அப். 28:3,5).

நமக்கு ஒரு எதிரி உண்டு, அவனை  எதிராளியாகி பிசாசு என்றும்  பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் என்றும் வேதம் அழைக்கிறது.  கல்வாரி சிலுவையில் கர்த்தர் அவனுடைய தலையை நசுக்கிப் போட்டார், அவனுடைய ஆயுதங்களையும் அதிகாரங்களையும் உரிந்து, அவனை வெளியரங்கமாகிய கோலமாக்கி சிலுவையில் அவன் மேல் வெற்றிச் சிறந்தார். ஆனால் அவனுடைய வாலை வைத்துக்கொண்டு, அதாவது அவனுடைய கொஞ்ச பலத்தை வைத்துக்கொண்டு, அனேகரை வஞ்சித்து, அதிக பொல்லாத கிரிகளைச் செய்கிறவனாய் காணப்படுகிறான். ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது, அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று என்று வெளி. 12:3,4ல் எழுதப்பட்டிருக்கிறது. வாலின் வல்லமையினால் நட்சத்திரங்களைப்  போலக் கர்த்தருக்காகப் பிரகாசிக்கிற அனேகரைக் கீழே  தள்ளிவிடுகிற வல்லமையுடையவனாகக் காணப்படுகிறான். 

கர்த்தருடைய பிள்ளைகள் அக்கினியாகவும், அக்கினி ஜுவாலைகளாகவும் காணப்படவேண்டும்,  அப்பொழுது  சத்துருவின் கிரியைகளை அழிக்கமுடியும். அக்கினியினால் சத்துருவின் கிரியைகளை அழித்த ஒரு சம்பவத்தை  மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேமில் இயேசுவைக் குறித்து சாட்சி பகிர்ந்ததின்  நிமித்தம், யூதர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும்  அவரை கொலை செய்யும்படிக்குத் தீர்மானித்தார்கள். ரோம போர்ச் சேவகர்கள் அவர்களுடைய கரங்களிலிருந்து  தப்புவித்து  சிறைச்சாலையில் அவனை அடைத்தார்கள்.  கடைசியில் பேலிக்ஸ், பெஸ்து போன்றவர்கள் அவனை விசாரித்தபின்பு அகிரிப்பா ராஜாவிடம் அனுப்பினார்கள்.  அகிரிப்பாவிற்கு  முன்பு பவுல் ரோம ராயனுக்கு அபயமிட்டதின் நிமித்தம், நூற்றுக்கு அதிபதியின் பாதுகாப்போடு ரோமாபுரிக்கு  அனுப்பி வைக்கப்பட்டான்.  யூரோக்கிலிதோன்  என்னும் கடுங்காற்று  அடித்ததின் நிமித்தம், இருநூற்றெழுபத்தாறு  பிரயாணிகளோடு செய்த கடல் பிரயாணத்தில் கப்பல் சேதமுற்றது, ஆகையால் மெலித்தா தீவில் அவர்கள் கரையொதுங்கினார்கள்.  அத்தீவைச் சேர்ந்த ஜனங்கள் அதிக அன்பை இவர்கள் மேல் காட்டினார்கள். அந்த நாட்கள் மழைக்காலமாகவும், குளிர்காலமாகவும் காணப்பட்டதினால்  பவுல் அவர்களோடு சேர்ந்து நெருப்பை மூட்டுவதற்கு  விறகுகளை வாரி நெருப்பில் போடுகையில், விறகுகளுக்குள் மறைந்திருந்த விரியன் பாம்பு நெருப்பின் வெப்பத்தினால் வெளிப்பட்டு பவுலின் கரங்களைக் கவ்விக்கொண்டது.  பவுல் அந்த விரியன் பாம்பை நெருப்பிலே உதறித் தள்ளி ஒரு சேதமும் அடையாமலிருந்தான். 

கர்த்தருடைய ஜனங்கள் நெருப்பாய் காணப்ப வேண்டும். அப்போது சத்துரு உங்கள் ஜீவியத்தில் கிரியை செய்யமுடியாது. உங்களுக்கு விரோதமாக மந்திர தந்திர கட்டுகள், பில்லிசூனியங்கள், இருளின் ஆதிக்கங்கள் கிரியைச் செய்ய முடியாது.  கர்த்தர், பழைய பாம்பாகிய சாத்தானை நியாயந்தீர்த்து அக்கினிக்கடலில் (Lake of fire) கடைசியில் தள்ளப்போகிறார். ஆனால் இன்று அவனுடைய  கிரியைகளைக்  கர்த்தருடைய ஜனங்கள் அக்கினியினால் அழிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆகையால் அக்கினியை  பூமியில்  போடவந்தவருடைய அக்கினியின் வல்லமையினால் நிரம்பிவிடுங்கள்.  யோவான் ஸ்நானகள் எனக்குப் பின்பு ஒருவர் வருகிறார், அவர்  உங்களைப்  பரிசுத்தாவியினாலும், அக்கினியினாலும் அபிஷேகிப்பார் என்று கூறினான். ஆவியானவருடைய அக்கினி அபிஷேகத்தினால் நிரம்பின ஜீவியம் செய்யுங்கள். பலிபீடத்தின் மேல் அக்கினி எப்பொழுதும் பற்றியெரிய வேண்டும் என்று விரும்பின தேவனுடைய அக்கினி நம்முடைய இருமயதாமாகிய பலபீடங்களில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதை உறுதிசெய்யுங்கள்.  அப்பொழுது சத்துருவின் கிரியைகள் ஒருபோதும் உங்களை அணுகுவதில்லை.  உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.    

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *