நீதி 21:31. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
தேவபிள்ளைகள் ஒன்றை அறிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாகலாம், வாலிபர்கள் நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தமாகலாம், காவல்துறை வேலைக்கு இராணுவத்துக்கோ பயிற்சிகளை மேற்கொள்ளலாம், கனடா ஆஸ்திரேலிய போன்ற நாடுகளுக்கு கடந்து செல்லவேண்டும் என்று முயற்சிக்கலாம், சபை ஆராதனைக்கு பாடல்கள் பயின்று ஆயத்தமாகலாம், எல்லாம் செய்யலாம், நல்லது தான். ஆனால் முடிவில் ஜெயம் கர்த்தரால் மாத்திரமே வரும்.
வசனம் சொல்லுகிறது கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங் 75:6,7) என்பதாக. காரணம் கர்த்தரே இஸ்ரவேலின் ஜெயபெலமானவர். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்று எழுதியிருக்கிறபடி அவரே மரணத்தை ஜெயித்தார். தாவீதுக்கு கர்த்தரே ஜெயத்தை தந்தார். ஆகையயால் தான் வசனம் சொல்லுகிறது நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர் என்பதாக.
உங்களுடைய உயர்வுக்காக மனிதர்களை நம்பி இருக்க வேண்டாம். ஏதோ ஒரு காரியத்தில் ஜெயம் வேண்டும், ஆனால் எனக்கு ஜெயம் கிடைக்கவில்லையே என்று சோர்ந்துபோயிருக்கிறீர்களா? கவலைபடாதிருங்கள் உங்களுக்கு ஜெயம் கர்த்தரிடத்திலிருந்து வரும். தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம் விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள் என்றும் வசனம் சொல்லுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள். குடும்ப காரியங்களிலும், வேலை காரியங்களிலும், தொழில் காரியங்களிலும் மற்ற எல்லா காரியத்திலும் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள். ஆகையால் மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே என்று எதிர் வல்லமைகளை பார்த்து பேசி கடிந்துகொள்ளுங்கள். நீங்கள் தோற்றுப்போவதற்கு பிறந்தவர்கள் அல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் ஜெயிக்க பிறந்தவர்கள். தோல்வி உங்களுடையது அல்ல, தோல்வி பிசாசுடையது.
தானியேலின் காரியம் எல்லாம் ஜெயமாக இருந்தது. காரணம் தானியேல் எல்லா காரியத்திலும் கர்த்தரை நம்பி இருந்தான். மூன்று வேலையும் தவறாமல் ஜெபித்தான். அவன் கர்த்தரை தேடுவதற்கு தடைகள் வந்தபோதும், வழக்கம்போல அவன் ஜெபித்து வந்தான். மற்ற எல்லாரை காட்டிலும் முகப்பொலிவுடன் காணப்பட்டான். எல்லாரை காட்டிலும் அவனுக்கு கர்த்தர் தேவ ஞானத்தை கொடுத்திருந்தார். ஆகையால் அவனுடைய வேலை காரியங்கள் எல்லாம் ஜெயமாக இருந்தது. அவன் ஐந்து இராஜாக்களை சேவித்தான்; ஒருவனாலும் அவனை விழத்தள்ள முடியவில்லை. காரணம் கர்த்தர் தானியேலோடு இருந்தார். தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது போல உங்கள் காரியங்களிலும் கர்த்தர் ஜெயத்தை கொடுப்பார். தானியேலின் தேவன் உங்கள் தேவன். நிச்சமாக எதிர்பார்த்திருந்த ஜெயம் உங்களுக்கு கர்த்தரிடத்திலிருந்து வரும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1 கொரி 15:57).
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org