ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிற படியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது (யோவான் 10:3,4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Um4O7Ef7zsE
இயேசு நம்முடைய நல்ல மேய்ப்பன். அவர் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்த நல்ல மேய்ப்பன். அவர் நம்பிக்கையோடு சொல்லுகிறார், என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது, ஆகையால் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நம்முடைய ஆண்டவர் பேசுகிறவர். நம்முடைய செவிகள் கர்த்தருடைய சத்தத்திற்கு நேராகத் திருப்பப்பட்டதாக காணப்பட்டால் அவருடைய சத்தத்தை அறியமுடியும். பலவிதமான பாஷைகளும் சத்தங்களும் பூமியில் தொனித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் ஆண்டவருடைய சத்தத்தை வேறு பிரித்து அறிந்து செவிகொடுக்கிறவர்களாய் நாம் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
சுயத்தின் சத்தம் சிலவேளைகளில் வெளிப்படுகிறது. ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்(லூக்கா 1:16-20), தன் ஆத்துமாவோடு தனக்கு தானே பேசுகிறவனாய் காணப்பட்டான். அதுபோல, நாமும் சுயமாய் நமக்குள் மாமிசத்தில் தோன்றுகிற சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களாய் சில வேளைகளில் காணப்படுவதுண்டு. சுயத்தின் சத்தத்தைக் கர்த்தருடைய சத்தம் என்று நினைக்கிற வேளைகளும் உண்டு.
மற்றவர்களுடைய சத்தங்கள், நண்பர்கள், உடன் வேலைப் பார்ப்பவர்கள், உறவினர்கள், ஊழியக்காரர்கள் என்று அனேகருடைய சத்தங்களும் நம்செவிகளில் தொனிக்கிறது. அவைகள் சில வேளைகளின் பிரயோஜமுள்ளவைகளாய் காணப்பட்டாலும், அவற்றைக் கர்த்தருடைய சத்தம் என்று எடுத்துவிடக் கூடாது. அன்று ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். மனுஷனுடைய சத்தத்திற்கும் தேவனுடைய சத்தத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை, அப்படியே சில வேளைகளில் நாமும் காணப்படுவதுண்டு. ஆகையால் மனுஷனுடைய வார்த்தைகளையே தேவனுடைய ஆலோசனையாய் எடுத்து ஏமாந்து போன வேளைகள் அனேகம்.
பிசாசின் சத்தங்கள் பூமியில் தொனித்துக்கொண்டிருக்கிறது. முதல்முதலாய் பிசாசின் சத்தத்தை ஏதேனில் கேட்டவள் ஏவாள். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவன். அவனுடைய வார்த்தைகள் அத்தனையும் வஞ்சகத்தினால் நிறைந்ததாய்க் காணப்படும். நம்மைத் தேவனை விட்டு, அவருடைய பிரசன்னத்தை விட்டுப் பிரிக்கிற வார்த்தைகளாய் காணப்படும். ஏவாள் அவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்ததினால் சாபத்தின் பாத்திரமாக மாறினாள். கர்த்தருடைய ஆவி சவுல் ராஜாவை விட்டு விலகின உடன் ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிற்று. அதன்பின்பு பொல்லாத ஆவியின் சத்தத்தைக் கேட்கிறவனாகச் சவுல் காணப்பட்டான், தாவீதை தொடர்ந்து வேட்டையாடினான். யூதாசுக்குள் சாத்தான் புகுந்தபின்பு இயேசுவைக் காட்டிக்கொடுக்கத் தருணம் தேடுகிறவனாய் காணப்பட்டான். இந்நாட்களில் காணப்படுகிற அனேக தொழில்நுட்பங்கள் சத்துருவின் சத்தத்தைக் கேட்பதற்கு ஜனங்களைத் திசைதிருப்புகிறதாய்க் காணப்படுகிறது.
கர்த்தர், நம்மோடு பேசுகிறவர். அவருடைய வார்த்தைகள் மூலம் பேசுகிறவர். செய்திகள் மூலம் பேசுகிறவர். பாடல்கள், சாட்சிகள், ஆவிக்குரிய புஸ்தகங்கள், பாடல்கள் மூலமாகவும் பேசுகிறவர். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்(ஏசா. 30:21). கர்த்தருடைய மந்தையின் ஆடுகளாய் இருந்தால் மேய்ப்பனுடைய சத்தத்திற்கும், அந்நியருடைய சத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்ள முடியும். நாம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு அவரை பின்செல்கிறவர்களாய் காணப்படவேண்டும். நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன் என்று யோவான் 10:15-ல் ஆண்டவர் நம்பிக்கையோடு கூறினார். ஒருமுறை இரண்டு மாணவர்களிடம் சங்கீதம் 23-ஐ வகுப்பறையில் கூறும்படி ஆசிரியர் கூறினாராம். ஒருவன் நன்கு நாடக வடிவில் அதைப் பேச வகுப்பறையிலிருந்த அத்தனை பேரும் ஆரவாரம் செய்து அவனைப் புகழ்ந்தார்கள். மற்றவன் உணர்ந்து ஜெப நிலையில் அமைதியான முறையில் பக்தியோடு கூறினானாம். வகுப்பறையில் தெய்வீக உணர்வு காணப்பட்டது. அப்போது முதலில் சங்கீதத்தைக் கூறினவன் சொன்னான், எனக்குச் சங்கீதம் தெரியும், ஆனால் என் நண்பனுக்கோ மேய்ப்பனைத் தெரியும். ஆம், நம்முடைய மேய்ப்பனாகிய இயேசுவை அறிந்து அவர் சத்தத்தைக் கேட்டு பின் செல்ல கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar