ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிறதேவனாலேயாம். ரோமர் 9:16.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/B8r_A6eHilQ
அனேக காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் நாம் விரும்புகிறவர்களாக காணப்படுகிறோம். அனேக குறிக்கோள்கள், திட்டங்களும் உண்டு. அவற்றை அடைவதற்கு வாழ்க்கையென்னும் ஓட்டத்தில் ஓடுகிறவர்களாகவும், விடாமுயற்ச்சி செய்கிறவர்களாகவும் காணப்படுகிறோம். குறிக்கோள்கள், நோக்கங்கள் தவறல்ல. அதையடைய பிரயாசப்படுவதும் தவறல்ல. ஆனால் மேற்குறிப்பிட்ட வசனம் சொல்லுகிறது, நாம் விரும்புவதினால் மாத்திரம் அல்ல, அதையடைய ஓடுவதினாலும் அல்ல, இரங்குகிற கர்த்தரால் தான் எல்லாம் ஆகும் என்று.
ஆண்டவர் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறவர், வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார் (சங்கீதம் 135:6). அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? (ரோமர் 9:19). ஈசாக்கு, ரபேக்காள் தம்பதிக்கு இரண்டு குமாரர்கள். மூத்தவனுடைய பெயர் ஏசா, இளையவனுடைய பெயர் யாக்கோபு. இவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்னமே, கற்பத்திலிருக்கும் போதே, மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று கர்த்தர் முன்குறிக்கிறார். அதுபோல கர்த்தர் யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால், எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் கர்த்தர் இரக்கமாயிருக்கிறார்.
நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுவதே அவருடைய இரக்கமாக காணப்படுகிறது. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:4,5). ஊரில் ஒருவனாய் வம்சத்தில் இரண்டு பேராய் நம்மை தெரிந்தெடுத்ததே அவருடைய கிருபையும் இரக்கமுமாய் காணப்படுகிறது.
தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை (sure mercies of David) உங்களுக்கு நிந்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் (ஏசாயா 55:3) என்ற அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நிச்சயமான கிருபைகளை, இரக்கங்களை, ஆசீர்வாதங்களை தந்து உங்களை ஆசீர்வதிப்பார். அவருடைய இரக்கத்தினால் உங்களை முன்குறித்த தேவன், உங்களை உயர்த்தி வாழவைப்பார். அவருடைய இரக்கம் மற்றவர்களைவிட உங்களை முன்னிலைப்படுத்தும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருரையும் ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Pastor.
David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org