அவன் என் சகோதரன்(He is my brother).

…..இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி,  கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு,  இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து,  என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய  பெனாதாத்  விண்ணப்பம் பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன்,  இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா,  அவன் என் சகோதரன் என்றான் (1 இராஜா. 20:32).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/QQOGaA4ZIFY

இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்களில் ஆகாப் மிகவும் பொல்லாதவன். தன் மனைவியாகிய  யேசபேலோடு  சேர்ந்து  இஸ்ரவேல்  ஜனங்கள்  பாகாலை சேவிக்கும் படிக்குத் தவறாக வழிநடத்தினவன். கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியாவை கொலை செய்யும்படிக்கு எல்லா தேசங்களிலும் ஆட்களை அனுப்பித் தேடினவன். அதுபோல  இஸ்ரவேலனாகிய  தன் சகோதரன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை இச்சித்து அது அவனுக்கு கிடையாமல் போனவுடனே தன் மனைவியின் மூலம் அவனைக் கொலை செய்தவன். ஆனால் இப்படிப்பட்ட பொல்லாத மனுஷனுக்குக் கூட கர்த்தர் தன்னுடைய  கிருபையைக் காண்பித்து சீரிய ராஜாவாகிய  பெனதாத்தின்  கைகளிலிருந்து  இருமுறை அவனை தப்புவித்தார். கர்த்தர்  பெனாதாத்தை  இவன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும்,  புறஜாதியானாகிய அவனைத் தன் சகோதரன் என்று கூறி,  அவனை தப்புவித்து,  அவனை தன் இரதத்தில் ஏற்றி,  அவனோடு உடன்படிக்கைச் செய்து அவனை  அனுப்பிவிட்டான். அது கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பாயிருந்தது,  அவனுடைய தவறான ஐக்கியமும் நட்பும் கர்த்தரை விசனப்படுத்தியது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,  நாம் யாரைச் சகோதரன்,  சகோதரி  என்று கூறி  ஐக்கியம் கொள்கிறோம். அனேக வேளைகளில் நம்முடைய கூடா நட்புகள் கர்த்தருடைய இருதயத்தை வேதனைப் படுத்துகிறது. வேதம்  நம்மைப் பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த  சகோதரர்கள் என்று அழைக்கிறது. ஆனால் சில பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் கிறிஸ்தவ மார்க்கமும் சபையும் சீரழிகிறது. வெள்ளையடிக்கப்பட்ட சுவரைப் போல,  வெள்ளையடிக்கப்பட்ட  கல்லறைகளைப் போல,  வெளிப்புறமாக அலங்கரிக்கப்பட்ட தோற்றமும்,  இருதயத்தில் அழுகிய பிணங்களைப்  போலத் துர்நாற்றமும் வீசுகிற கள்ள சகோதர சகோதரிகளால்,  மணவாட்டியாகிய சபை  கறைபட்டுக்  காணப்படுகிறது. ஆகையால் மரம் தன் கனியினால் அறியப்படும் என்ற வசனத்தின்படி கனிகளைப் பார்த்து நபர்களைப் பகுத்தறிந்து நட்பு பாராட்டுங்கள்.

கடைசி நாட்களில் உங்கள் குடும்பங்களுக்குள் யாரை அனுமதிக்கிறீர்கள்,  யாரோடு உங்கள் உறவுகள் காணப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். உங்கள் தவறான ஐக்கியங்களால் குடும்பம் என்னும் பலிபீடம் சிதைந்து காணப்படுகிறது,  குடும்ப ஜெபங்கள் குறைந்து போனது. தேவனோடு செலவிடுகிற நேரங்கள் குறைந்து போய்விட்டது. விவாகங்களும்,  விவாக படுக்கைகளும் (மஞ்சம்) கனத்திற்குரியதாய்,  அசுசிப்படாமல்  காணப்படவேண்டும் என்று வேதம் எச்சரிக்கிறது,  ஆனால் தவறான நட்புகளாலும்  கூடுகைகளாலும்  இவைகள் கறைபட்டுக் காணப்படுகிறது. ஆகையால் உங்களுக்குள் ஒரு எல்லைக் கோட்டை நியமித்துக் கொள்ளுங்கள்.  குறிப்பிட்ட  நேரத்திற்குப் பின்பு வீடுகளில் யாரையும் அனுமதிக்காதிருங்கள். உங்களுக்கு பாரமாய் தோன்றுகிற எல்லாவித உறவுகளையும் விட்டு  பிரிந்து விடுங்கள். பிசாசு மகா தந்திரசாலி,  ஜனங்களை வஞ்சிக்கிறவன். குடும்பங்களை உடைப்பதின் நிமித்தம்  சபையைச்  சிதறடிப்பதற்கு  முயற்சிக்கிறவன். சபைகளை பெலகீனப்படுத்தி,  தேசங்களில் ஒழுக்கக்கேடுகளை விதைக்கிறவன்.  ஆகையால் அவனுக்கு இடம் கொடாதிருங்கள். கர்த்தருடைய வருகை வெகு சீக்கிரமாய் காணப்படுகிறது. ஆகையால் நாம் அத்தனைப்பேரும் பயபக்தியோடு அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *