யாக்கோபு 4:5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/uF3tPrWReI0
பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாய் இருப்பதுபோல நாமும் கர்த்தர் நமக்கு கொடுத்த தரிசனங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற்று கொள்ள வாஞ்சையாய் இருக்கவேண்டும். சமீபத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்த தென்கொரிய எழுப்புதல் வீரர் போதகர் பால்(டேவிட்) யாங்கி சோ அவர்கள் நமக்கு கர்த்தர் கொடுத்த தரிசனங்களையும் அழைப்பையும் வாக்குத்தத்ததையும் பெற்றுக்கொள்ள அனல் பற்றும் வாஞ்சை நம் இருதயத்தில் மனதில் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். வாக்குத்தத்தங்களையும் தரிசனங்களையும் பற்றி அவியாத விருப்பம் நமக்குள் இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அநேகர் தேவனே என் ஜெபத்திற்கு பதில் தாரும் என்று சாதாரணமாகவே ஜெபிக்கிறார்கள். அவர்கள் ஆலயத்தை விட்டு வெளியே போனவுடன் எதற்காக ஜெபித்தோம் என்பதை கூட மறந்து போய் விடுகிறார்கள். இப்பழக்கம் ஒருபோதும் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதில்லை. மாறாக உங்களுக்கு அனல் பற்றும் தீராத வாஞ்சை இருக்க வேண்டும்.
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும் (நீதி 10:24) என்றும் அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் (சங் 37:4) என்றும் வேத வசனங்கள் சொல்லுகிறது. ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அதையே உங்களுடைய மனக்கண்களில் வைத்து பார்த்து ஜெபித்துக்கொண்டிருக்கவேண்டும்.
1958ல் பால் யாங்கி சோ தன்னுடைய ஊழியத்தை துவங்கியபோது கொரியாவிலே மிகப்பெரிய ஆலயத்தை கட்டி எழுப்பவேண்டுமென்ற எண்ணம் அவருடைய ஆத்துமாவில் அக்கினியாய் எரிந்துகொண்டிருந்தது. இந்த அக்கினியோடு அவர் வாழ்ந்தார், இந்த அக்கினியோடு அவர் உறங்கினார், இந்த அக்கினியோடு அவர் நடந்தார். இப்பொழுது உலகிலேயே மிக பெரிய ஆலயம் அவர் நிறுவிய ஆலயமாக தென்கொரியாவில் இருக்கிறது. உங்கள் இருதயத்தில் வாஞ்சை பற்றியெரியவேண்டும். அப்படியில்லாவிட்டால் தேவன் உங்களில் அப்படிப்பட்ட வாஞ்சையை வைக்கும்படி ஜெபித்து காத்திருங்கள். நீங்கள் ஒரு அக்கினி பிழம்பாக மாற வேண்டுமென்று தேவன் விருப்பமுடையவராய் இருக்கிறார். ஒன்றை பெறவேண்டும் என்ற வாஞ்சை உங்களில் அக்கினியாய் எரியும் போது நீங்கள் பலன்களை பெறுவீர்கள். கால் மிதிக்கும் எந்த தேசத்தையும் உனக்கு சொந்தமாக தருவேன் என்று கர்த்தர் வாகு கொடுத்திருக்கிறார். அதை சுதந்தரித்துக்கொள்ள உங்கள் இருதயத்தில் அனல் பற்றும் வாஞ்சை இருக்கட்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

