2 இராஜா 9:33. அப்பொழுது அவன்: அவளைக் (யேசபேலை) கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் (யெகூ) அவளை மிதித்துக்கொண்டு, …
யேசபேல் என்றால் கற்ப்பில்லாத பாகால் இல்லையென்றால் கற்ப்பில்லாத விக்கிரகம் என்று அர்த்தம். இவளுடைய தகப்பனின் பெயரிலும் பாகாலின் நாமம் காணப்படுகிறது. இந்த யேசபேல் என்னும் பொல்லாத ஆவி பாகாக்களின் நாமத்தை ஜனங்களுக்குள்ளாக புகுத்துகிறதாக காணப்படுகிறது. (1 இராஜா 16:31). இப்படிப்பட்ட பொல்லாத ஆவியை கர்த்தருடைய ஜனங்கள் இனங்கண்டு அழிக்கிறவர்களாக காணப்படவேண்டும்.
இந்த யேசபேல் என்னும் பொல்லாத ஆவி கர்த்தருடைய பிள்ளைகளை, ஊழியக்காரர்களை, தீர்க்கதரிசிகளை சங்கரிக்கிற பொல்லாத ஆவியாக காணப்படுகிறது (1 இராஜா 18:4). ஆதி அப்போஸ்தல நாட்களிலிருந்து இன்றும் உலகளாவிய சபை தாக்கப்படுவதற்கும், கர்த்தருடைய பிள்ளைகள் கொல்லப்படுகிறதற்கும் இந்த பொல்லாத யேசபேலின் ஆவி பின்னால் இருந்து கிரியை செய்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி ஒபதியா பாகாலுக்கு முழங்காற்படியிடாத தீர்க்கதிசைகளை பாதுகாத்து வந்தானோ, அதுபோல கர்த்தருடைய ஊழியக்காரர்களை பாதுகாக்கும்படியாக அநேகர் ஒபதியாக்களாக மாறவேண்டும்.
யேசபேலென்னும் ஆவி தோப்பு விக்கிரகங்களை வளர்ப்பிக்கிற பொல்லாத ஆவி (1 இராஜா 18:19). தோப்பு விக்கிரகமென்றால் அது ஒரு பெண்ணாவியாக / விக்கிரகமாக காணப்படுகிறது. இவ்வகையான பொல்லாத ஆவி கர்த்தருடைய ஜனங்களுக்கு இச்சைகளை வருவித்து, மாயையான கன்னியில் அகப்படும்படியாக செய்து அவர்களை வீழ்த்தவேண்டுமென்பதே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் எப்பொழுதெல்லாம் தவறான உறவு கொள்ளும்படியான இச்சைகள் வருகிறது, அப்பொழுதெல்லாம் யேசபேல் என்னும் பொல்லாத ஆவி உங்களை வீழ்த்த முயற்சிக்கிறது என்பதை அறிந்து, அப்படிப்பட்ட மாயைகளுக்கு விலகி ஓடுகிறவர்களாக காணப்படவேண்டும்.
மாத்திரமல்ல, இந்த பொல்லாத ஆவி ஊழியக்காரர்களுக்கு விரோதமாக ஆட்களை அனுப்பி பயமுறுத்தும் (1 இராஜா 19:2). இவற்றை இந்நாட்களில் அநேக இடங்களில் நாம் பார்க்கமுடிகிறது. ஆனால் ஒன்று நிச்சயம் கர்த்தர் ஊழியக்கார்களுக்கு துணையாக இருந்து நீ போக வேண்டிய தூரம் வெகுஅதிகம் என்று சொல்லி உற்சாகப்படுத்துகிறவராக காணப்படுகிறார்.
கடைசியாக யேசபேல் என்னும் பொல்லாத ஆவி குடும்ப தலைவர்மீதும், நாட்டை ஆளுகிறவர்கள் மீதும் ஏறி அமர்ந்து அவர்களை இயக்குவிக்கிறதாக காணப்படும் பொல்லாத ஆவி. (1 இராஜா 21:25). வீட்டிற்கு தலை புருஷன், அது தான் வேதத்தின் பிரமாணம். மாறாக புருசனுக்கு மேலாக மனைவி தன்னை உயர்த்துகிறவளாக காணப்படுகிறாளென்றால், யேசபேல் என்னும் பொல்லாத ஆவி உங்கள் குடும்பத்தில் கிரியை செய்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட காரியங்களுக்கு கர்த்தருடைய ஜனங்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது.
கர்த்தர் இந்த பொல்லாத யேசபேலை குறித்து என்ன சொல்லுகிறார் என்றால் யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும் (1 இராஜா 21:23) என்பதாக.
இந்த யேசபேலை வேதத்தின்படி அழித்தவன் யெகூ. யார் இந்த யெகூ? வசனம் சொல்லுகிறது இவன் தைலகுப்பியினால் அபிஷேகம்பண்ணப்பட்டவன் (2 இராஜா 9:3). அவன் தான் யேசபேலை அழித்து அவளை மிதித்து உள்ளே கடந்து சென்றான் என்று வசனம் சொல்லுகிறது. அதுபோல இன்றைக்கும் நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அதே அபிஷேகத்தோடு யேசபேல் என்னும் பொல்லாத ஆவியை இயேசுவின் நாமத்தில் மிதியுங்கள். சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கும் அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக, இயேசுவின் நாமத்தில், கர்த்தருடைய ஆவியானவரின் அபிஷேகத்தோடு உங்களுக்கு விரோதமாக, உங்கள் குடும்பத்துக்கு விரோதமாக, சபைக்கு விரோதமாக, தேசத்திற்கு விரோதமாக செயல்படும் பொல்லாத யேசபேலின் ஆவியை மிதியுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org