உசியா ராஜா மரணமடைந்த வருஷம்(In the year king Uzziah died).

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில்,ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது (ஏசாயா 6:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KmyMPOp1_a8

உசியா தன்னுடைய பதினாறு வயதில் யூதாவின் மேல் ராஜாவானான், ஐம்பத்திரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தான். அவன் தன்னுடைய ஆட்சியின் நாட்களில் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேவனைத் தேடுவதற்கு மனதிணங்கியிருந்தான். ஆகையால் அவன் காரியங்களைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார். தேவன்  அவனுக்குத் துணைநின்று எதிரிகளை  மடங்கடிக்கும்படிக்குச்  செய்து,அவனுடைய கீர்த்தி வெகுதூரம் பரம்பும் படிக்குச் செய்தார். ஆனால்  அவன் பலப்பட்ட போது அவனுடைய இருதயம் மேட்டிமைக் கொண்டது,ஆகையால் கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்தான். ஆசாரியர்கள் மாத்திரம் தேவாலயத்தில் தூபபீடத்தின் மேல் தூபம் காட்டவேண்டும்,ஆனால் இவன் தூபம்  காட்டுப்படிக்கு  உட்பிரவேசித்தான், ஆசாரியர்கள் தடுத்தும் கேட்காமல்,அவர்கள் மேல் கோபம்கொண்டான். அதினிமித்தம் கர்த்தர் அவனை குஷ்ட ரோகத்தினால் வாதித்தார்,அந்த வியாதினிமித்தம் மரித்துப் போனான். ஆனால் அவன் மரணமடைந்த வருஷத்தில் வேறொரு காரியம் நடந்தது. ஏசாயா ஒரு தரிசனத்தைக் கண்டான்,ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டான், அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. ஆண்டவருடைய அங்கலாய்ப்பின் தொனி இவன் செவிகளில் விழுந்தது. யாரை நான் அனுப்புவேன்,யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு,இதோ,அடியேன் இருக்கிறேன்,என்னை அனுப்பும் என்று தன்னை அர்ப்பணித்தான். ஒரு உலக ராஜாவின் மரணம்,அவனை நம்பியிருந்த  ஏசாயாவை  கர்த்தருடைய ஊழியக்காரனாய் மாற்றினது. கர்த்தருடைய பிள்ளைகளே,நாம் அனேக உலக காரியங்களின் மேல் நம்பிக்கையை வைத்து,அவைகளே நம்முடைய எதிர்காலத்தின்  நம்பிக்கையாகக்  கொண்டிருப்பதின் நிமித்தம்,கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கக் கூடாமல் போகிறது. கர்த்தர் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கிற நோக்கங்களும் நிறைவேறாமல் போகிறது. உசியாக்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து மரிக்கட்டும். அழிந்து போகிற உசியாக்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு உன்னதமான சிங்காசனத்தில் எப்போதும் உயிரோடிருக்கிறவரை உங்கள் ராஜாவாய் பாருங்கள். 

ஆபிராம் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஊர் என்ற  பாபிலோனிய தேசத்தை விட்டு (யோசுவா24:2-3,அப். 7:2-3), கானானுக்கு  நேராகப் புறப்பட்டான். அவனோடு கூட அனேகர் கடந்துவந்தார்கள், அவன் தகப்பனாகிய தேராகும் கூடவந்தான். ஆரான் மட்டும் வந்த உடனே தேராகு தன் குமாரர்களோடும்,அவர்கள் குடும்பத்தோடும்  ஆரானிலே தங்கிவிட்டான். ஆபிராமும் நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றவருடைய அழைப்பை மறந்து ஆரானிலே தன் தகப்பனோடு தங்கிவிட்டான். கானானின் பயணப்பாதைக்  கடினமானதாகக்  காணப்பட்டிருக்கக் கூடும்,ஆகையால் எல்லோரும் ஆரானிலே தங்கிவிட்டார்கள். தேராகு என்ற பெயரின் அர்த்தம் தாமதம்(Delay)  என்றும்,ஆரான் என்ற பெயரின் அர்த்தம் கனியற்ற, தரிசுநிலம்(Barren) என்பதாகவும் காணப்படுகிறது. தேராகு மரிக்கிற வரைக்கும் ஆபிராம் அங்கே காணப்பட்டான்.  கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்றக்கூடாமல் தடைசெய்கிற தேராகுகள் யார் என்பதை இனம் கண்டுகொள்ளுங்கள்.  அப்படிப்பட்ட தேராகுகள் உங்கள் வாழ்க்கையிலிருந்து மரிக்கட்டும். அப்படிப்பட்டவர்களால் உங்கள் வாழ்க்கையே கனியற்றதாக,பிரயோஜனமற்றதாக காணப்படக்கூடும். நம்மை பின்னிற்கு இழுக்கிறவர்களோடு நாம் நடந்தால்,ஆவிக்குரிய ஓட்டத்தில் தோற்றுப்போய் விடுவோம்,பரம கானானாகிய பரலோகம் என்னும் பரிசுப் பொருளை இழந்துபோய் விடுவோம்.   

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *