அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார் (யோபு 33:26).
புதிதாய் பிறந்த இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும், ஆசீர்வாதத்தையும் நிறைவாய் தரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன்.
இந்த புதிய வருடத்தில் உங்கள் நீதிக்கு தக்கதாக கர்த்தர் உங்களுக்குப் பலன் அருளிச்செய்வார். எலிகூ என்ற வாலிபன் யோபுவுக்கு கொடுத்த ஆலோசனையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. அது அவனுடைய சொந்த வார்த்தைகள் அல்ல, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஆவியினால் நிறைந்து, ஆவியானவரால் ஏவப்பட்டுக் கூறின வார்த்தையாகக் காணப்படுகிறது. கர்த்தருடைய கோபம் மற்ற விருத்தாப்பியராகிய யோபுவின் மூன்று நண்பர்கள் மேல் வந்தது, ஆனால் எலிகூவின் மேல் கர்த்தருடைய கோபம் வரவில்லை(யோபு 42:7). ஆகையால் எலிகூ ஒரு கருவியே தவிர, இந்த வசனம் ஆவியானவருடையது. கர்த்தருடைய வார்த்தையின் படியே, தேவன் யோபுவின் நீதிக்குரிய ஜீவியத்தின் பலனைக் கொடுத்தார். நீதியாய் ஜீவித்ததின் நிமித்தமும், நீதிக்குரிய காரியங்களை அவன் செய்ததின் நிமித்தமும் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைக் கர்த்தர் அருளிச்செய்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் நீதிக்குரிய, பக்தியுள்ள ஜீவியத்திற்குரிய பலன்களையும், ஆசீர்வாதங்களையும் 2022ம் வருஷம் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுவார். நாம் ஆராதிக்கிற தேவன் நீதியுள்ளவர், நீதியின் மேல் அவருடைய பிரியம் காணப்படுகிறது (சங். 11:7). அவருடைய நாமம், நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்ற யேகோவா ஸிட்கேனு என்பதாகும் (எரே. 23:6). நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு, பாவம் அறியாத இயேசுவை, பிதாவாகிய தேவன் நமக்காகப் பாவமாக்கினார். நீதி என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்குள்ளாய் எழும்பக் கூடும். Behaviour that is morally right and justifiable. நியாயமான, சரியான அனுதின நடத்தையாகக் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள், எதைச் செய்தாலும், யாரோடு பழகினாலும் அது நியாயமானதாகவும், கர்த்தருடைய பார்வையில் சரியானதாகவும் காணப்பட வேண்டும். 2022வது வருடம் நியாயமானதையும், சரியானதையும் நீங்கள் செய்யும் போது, அதற்குரிய பலன்களைக் கர்த்தர் நிறைவாய் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். நாம் மறுபடியும் பிறந்த கர்த்தருடைய பிள்ளைகள். ஆகையால் நீதியைச் செய்கிறவர்களாய் தான் காணப்படவேண்டும் (1 யோவான் 2:29).
நீதியைச் செய்வதற்கு, அனுதினமும் நீதியின் வசனத்தில் பழகுங்கள்(எபி. 5:13, 14), அப்போது தான் நன்மை தீமையையும், நீதி அநீதியையும் வகையறுக்க முடியும். மேலும் நீதியின் கனிகளால் நிறைந்த ஒரு ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள் (பிலி. 1:10). அதுபோல நீதியின் பலிகளை ஆண்டவருக்கு அனுதினமும் செலுத்துங்கள் (சங். 51:19). கர்த்தரைத் துதிப்பதும், ஆராதிப்பதும், ஜெபிப்பதும், கொடுப்பதும் நீதியின் இருதயத்திலிருந்து வரட்டும். உதடுகளால் கர்த்தரைக் கனம் பண்ணி இருதயம் ஆண்டவரை விட்டு தூரமாகக் காணப்பட வேண்டாம். அநீதியாய் தோன்றுகிற எல்லாக் காரியங்களையும் விட்டு விலகி விடுங்கள். அப்போது உங்கள் நீதியின் பலனை கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கட்டளையிடுவார். உங்கள் நீதியின் விளைச்சலைக் கர்த்தர் வர்த்திக்கப் பண்ணுவார் (2 கொரி. 9:10). நீதியாய் ஜீவிக்கிற உங்கள் சிரசின் மேல் ஆண்டவருடைய நித்திய ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி. 10:6). நீதிக்குரிய வாழ்க்கை வாழுகிற உங்கள் மேல் நீதியின் சூரியனுடைய ஆரோக்கியம் இறங்கும்(மல். 4:2). நோயில்லாத சுக வாழ்வைக் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுவார். கொள்ளை நோயின் நாட்களிலும் உங்களை அவருடைய சிறகின் கீழ் மூடி மறைத்து பாதுகாத்துக் கொள்வார். கர்த்தர் தம்முடைய நீதியின் வலது கரத்தினால் உங்களைத் தாங்குவார் (ஏசா. 41:10). கர்த்தருடைய வருகையின் வேளையில், நீதியாகவும், உண்மையாகவும் ஜீவித்த உங்களுக்கு நீதியின் கிரீடத்தைத் தந்து உங்களைக் கனப்படுத்துவார்(2 தீமத். 4:8).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar