யோசு 11:19. கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.
யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் எல்லா பட்டணங்களையும் யுத்தம் செய்து பிடித்தார்கள். கடந்த நாட்களில் நம்முடைய தேசத்தில் கனமான மழை பெய்தது. அந்த மலையினிமித்தம் அநேக மக்கள் பாதிப்படைந்தார்கள். மழையினால் தண்ணீர் வெள்ளம்போல புரண்டுவந்தது; இதினிமித்தம் ஜனங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மிகவும் பாதிப்படைந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜனங்கள் மீது ஒரு வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வெள்ளத்தை பற்றி ஜனமோ அரசாங்கமோ அக்கறைகொள்ளவில்லை. அது எந்த வெள்ளம் ? வசனம் சொல்லுகிறது, வெள்ளம்போல் சத்துரு வருவான் என்பதாக. அவன் ஜனங்கள் மீது வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறான், ஜனங்களை பாதாள கடலுக்கு நேராக அழைத்துச்செல்கிறவனாக காணப்படுகிறான். சாத்தானின் பாவ வெள்ளத்திலிருந்து ஜனங்களை காப்பாற்றிட தேவஜனங்கள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது (வெளி 12:15) என்ற வசனத்தின்படி வருங்காலத்திலும் சத்துரு ஜனங்கள் மீது வெள்ளம்போல வந்து அழிவை கொண்டுவருவான். அவைகளிலிருந்து ஜனங்களை காப்பாற்ற நீங்கள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்குவது தான் எழுப்புதல். அப்படிப்பட்ட எழுப்புதலை தேசத்தில் உண்டாக்கி ஜனங்களை போர்க்கால அடிப்படையில் மீட்டெடுக்கவே கர்த்தர் உங்களை தெரிந்தெடுத்திருக்கிறார்.
லோத்து சோதோமின் ஜனங்களோடு சிறைபட்டுப்போனான் என்று ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, அவன் வீரத்தோடு புறப்பட்டான். தன்னுடன் 318 பேரை மாத்திரம் கூட்டிகொண்டுபோனான். இந்த சிறிய கூட்டம் நான்கு பெரிய இராஜாக்களையும், அவர்களின் இராணுவங்களையும் முறியடித்து, லோத்தையும் அவன் குடும்பத்தையும் மீட்டெடுத்தது. யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் கூட யுத்தம் செய்து தான் சுதந்தரித்தார்கள். அதுபோல நீங்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் சேனையாக எழும்புங்கள். உங்களுக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போங்கள். தேசத்தை பிசாசின் பிடியிலிருந்து மீட்டெடுக்க இராணுவ வீரனாக, தீயணைப்பு வீரனாக, ஜாமக்காரனாக, விழித்தெழும்புங்கள். யுத்தம் செய்து சாத்தானின் கோட்டையை பிடியுங்கள். ஜெப யுத்தம், முழங்கால் யுத்தம், உபவாச யுத்தம், விசுவாச யுத்தம் என்பவைகளை ஒவ்வொருநாளும் பயிற்றுவித்து இயேசுவின் சுவிசேஷத்தை உலகமெங்கும் கொண்டுசெல்லுங்கள். நீங்கள் தான் கடைசிகால எழுப்புதலுக்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org