தீத்து 1:9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
ஆரோக்கியமான உபதேசம் என்பது ஆங்கிலத்தில் Sound / Hygienic doctrine என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையானது கிரேக்க பதத்தில் Hugiaino என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஆரோக்கியமான உபதேசத்தை குறித்து குறிப்பாக பவுல் தீமோத்தேயுக்கும், தீத்துக்கும் எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதை நாம் பார்க்கலாம்.
நாம் ஏதாவது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், எந்த மருத்துவமனை சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதோ அந்த மருத்துவமனைக்கு செல்ல வாஞ்சிப்போம். நமது ஊர்களில் பொதுவாக அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொதுவாக யாரும் விருப்பபட மாட்டார்கள். காரணம் அங்கேயுள்ள தரை, படுக்கைகள், கழிவறைகள் ஆரோக்கியமானதாக இருக்காது. நாம் சந்தைக்கு சென்றால் எங்கே சுத்தமான, கலப்படமில்லாத காய் கறிகள் கிடைக்கிறதோ அங்கே தான் சென்று நமக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். எந்த சிற்றுண்டி சுத்தமாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதோ அங்கே தான் சென்று சாப்பிட வேண்டும் என்று விருப்பப்படுவோம். அதுபோல தான் எந்த சபையில் ஆரோக்கியமுள்ள வார்த்தைகள் வெளிப்படுகிறதோ அங்கே தேவ ஜனங்கள் நிலைத்திருக்கும்படி கர்த்தர் எதிர்பார்க்கிறார். சில சபைகளில் கிருபையை தவறாக சித்திரித்து, என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் கர்த்தருடைய கிருபை நமக்கு மன்னிப்பை கொடுக்கும் என்று தவறான உபதேசங்களை போதிக்கிறார்கள். அப்படிப்பட்ட உபதேசங்களுக்கு நீங்கள் விலகி இருக்க வேண்டும். அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமான உபதேசத்திற்கு விலக வேண்டும். மாத்திரமல்ல நீங்களும் நல்ல உபதேசங்களை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
- முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும்.
- முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும் வேண்டும்.
- பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களுமாயிருக்க வேண்டும்.
- பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் வேண்டும். இப்படியான ஆரோக்கியமான உபதேசத்தில் நிலைத்திருக்கிறவர்களாகவும், அவற்றிற்கு முன்மாதிரியாகவும் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும்.
சபையில் ஒருவர் உங்களிடம் ஆலோசனைக்கு வந்தால், சத்தியத்தை சத்தியமாகவும், கலப்படமில்லாமலும், தேவபக்திகேற்ப கடித்துக்கொண்டு புத்திசொல்ல வேண்டும். இதை தான் அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துக்கு சொல்லுகிறார். சபையிலிருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வார்த்தையை, உபதேசத்தை வாஞ்சிப்பீர்களென்றால், அது மகிமையாக காணப்படும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org