தன் பிழைகளை உணருகிறவன் யார்?

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும் (சங்-19:12).

தேவன்,  ஆதாமைச் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும்  காக்கவும் வைத்தார். தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியைப்  புசிக்கலாம் என்று கூறின கர்த்தர்,  நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்,  அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும்  கட்டளையிட்டார். ஏவாள் அதை அறிந்த பின்னும்,  சர்ப்பத்தின் தந்திரமான வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து,  விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைத் தான் புசித்ததுமின்றி,  ஆதாமிற்கும் கொடுத்தாள். பின்பு தோட்டத்தில் உலாவுகிற கர்த்தரின் சத்தத்தைக் கேட்ட ஆதாமும்,  ஏவாளும் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்ட வேளையில்,  நாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதினால் ஒளித்துக்கொண்டோம் என்றார்கள். நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்று ஆதாமை நோக்கி கர்த்தர் கேட்ட வேளையில்,  நீர் என்னோடு கூட இருக்கும் படிக்குத் தந்த ஸ்திரீயானவள் எனக்குப் புசிக்கக் கொடுத்தாள்,  நான் புசித்தேன் என்று பழியை ஸ்திரீயின் மேல் போட்டான். கர்த்தர் ஸ்திரீயை நோக்கி ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்ட வேளையில்,  சர்ப்பம் என்னை வஞ்சித்தது என்றாள். தன் தவறுகளையும்,  பிழைகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அன்றிலிருந்து துவங்கியது. நாம் நம்மை நியாயப்படுத்தி,  பழிகளை மற்றவர்கள் மேலும்,  சூழ்நிலைகள் மேலும் போடுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டோம். இஸரவேலின் முதல் ராஜாவாகிய சவுலும் கூட,  ஏன் எனக்காய் காத்திருக்காமல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தினாய் என்று சாமுவேல் தீர்க்கதரிசி கேட்ட வேளையில்,  ஜனங்கள் என்னை விட்டுப் பிரித்துப் போகத் துவங்கினார்கள்,  ஆகையால் துணிந்து அப்படிச் செய்தேன் என்று பழியை தன் ஜனங்கள் மேல் போட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே நாம் மற்றவர்களைக் குற்றம் சுமத்துவதற்கு முன்பு,  நம்முடைய பிழைகள் என்ன,  நாம் எங்கே தவறி விட்டோம் என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. குடும்பத் தலைவனும்,  தலைவியும் ஒருவருக்கொருவர் குற்றப் படுத்துவதற்கு முன்பு உங்களுடைய தனிப்பட்ட தவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைக் குற்றப்படுத்துவதற்கு முன்பு உங்கள் தவறு என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். உடன் விசுவாசிகளையும்,  ஊழியர்களையும் குற்றப்படுத்துவதற்குப் பதிலாக உங்களுடைய பிழை என்ன என்று சோதித்தறியுங்கள். பிசாசுடைய பெயர்களில் ஒன்று,  சகோதரர்களைக் குற்றப்படுத்துகிறவன்.  யோபுவைக் குற்றப்படுத்தினான்,  பிரதான ஆசாரியனாகிய யோசுவா அழுக்கு வஸ்திரத்தைத் தரித்தவனாய் காணப்பட்டான் என்பதைக் குறித்து குற்றப்படுத்தும் படிக்கு அவன் அருகில் நின்றான். ஆகையால் அவனுடைய பிடியில் அகப்பட்டு மற்றவர்களைக் குற்றப்படுத்தாத படிக்கு உங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

சங்கீதக் காரன் ஆண்டவரை நோக்கி,  தேவனே,  என்னை ஆராய்ந்து,  என் இருதயத்தை அறிந்துகொள்ளும்,  என்னைச் சோதித்து,  என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,  நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று ஜெபித்தான். அவன் பத்சேபாளோடு பாவம் செய்தபின்பு,  நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக அவனுடைய மீறுதல்களைக் கர்த்தர் உணர்த்தியவுடன்,  நான் பாவம் செய்தேன் என்று தன் மீறுதல்களை உணர்ந்து அறிக்கையிட்டான். ஆகையால் கர்த்தர் அவனுடைய மீறுதலை மன்னித்தார். தானியேலும் எழுபது வருட பாபிலோனியச் சிறையிருப்பிற்குப் பின்பு ஜெபித்த வேளையில்,  நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம் என்று அறிக்கையிட்டு ஜெபித்தான். கர்த்தர் தன்னுடைய முந்தைய தீர்மானத்தின் படி இஸ்ரவேல் ஜனங்களை பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கும் படிக்குத் தீர்மானித்தார். ஆயக்காரனும் தன் மார்பில் அடித்து பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்த வேளையில் நீதிமானாக்கப்பட்டவனாய் கடந்து சென்றான். தேவ ஜனமே,  உங்கள் பாவங்களையும்,  பிழைகளையும் உணர்ந்து அறிக்கையிடுங்கள்,  பாவங்களை மறைக்கிறவனுக்கு வாழ்வு இல்லை,  அறிக்கை செய்து விட்டு விடுகிறவனுக்கு இரக்கம் உண்டு. உங்கள் பிழைகளை நீங்கள் உணர்ந்து,  அறிக்கையிட்டு விட்டு விடும் போது,  கர்த்தர் உங்களை மன்னித்து ஆசீர்வதித்து உயர்த்துவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *