தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம்.

நான் தீட்டுப்படவில்லை, நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்@ நீ செய்ததை உணர்ந்துகொள்,  தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ (எரேமியா 2:23).

யூதாவின் ஜனங்களைப் பார்த்து நீ தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் என்று கர்த்தர் கடிந்து கொண்டார். அவர்களுக்குத் துவக்கத்தில் கர்த்தர் பேரில் பக்தியும், நேசமும் காணப்பட்டது.  ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கர்த்தரை விட்டுவிட்டு தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டப்பட்டவர்கள், காட்டுத் திராட்சை செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனார்கள். அதோடு கர்த்தருக்கு முகத்தையல்ல, தங்கள் முதுகைக் காட்டி, அவரை விட்டு விலகிச் சென்றார்கள். அவர்களுடைய தாறுமாறான, நிலையற்ற, பாவத்தின் வாழ்க்கையைக் கண்ட கர்த்தர், அவர்களைத் தாறுமாறாய் ஓடுகிற ஒரு பெண்ணொட்கத்தோடும், தங்கள் இச்சையின் வெறியிலே காணப்படுகிற ஒரு காட்டுக்கழுதையோடும் ஒப்பிட்டார்.  

இந்நாட்களிலும் அனேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையானது தாறுமாறாகக் காணப்படுகிறது. ஒழுக்கமில்லாதவர்களாகவும், நேர்மையில்லாதவர்களாகவும், உண்மையில்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களும், கர்த்தருடைய வழியில் நடவாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். சபைக்குள் தான் இருப்பார்கள், ஆனால் வாழ்க்கை தாறுமாறாய் காணப்படும். ஊழியம் செய்வார்கள், ஆனால் வாழ்க்கை செம்மையாய் இருப்பதில்லை. தன் வழிகளில் தாறுமாறானவன் கர்த்தரை அலட்சியம் பண்ணுகிறான்(நீதி. 14:2) என்ற வார்த்தையின் படி கர்த்தரை அலட்சியம் பண்ணி, அவமானப்படுத்தி வேதனைப் படுத்துகிறார்கள். ஆகையால் தாறுமாறுகளை விட்டு அவருடைய ஜனங்கள் விலகவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல், விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமத்தேயுவுக்கு எழுதும் போது, கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்றும்;, மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக்  கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு(2 தீமத். 3:1-5) என்று எழுதினார், அப்படிப்பட்ட கொடிய காலமாக இக்காலம் காணப்படுகிறது. தேவபக்தியின் வேஷம் எங்கும் காணப்படுகிறது, ஆனால் தேவப்பிரியராயிராய் காணப்படாதபடி சுகபோகப் பிரியராய் காணப்படுகிறார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே, வேதம் காட்டுகிற உத்தமமான கிறிஸ்தவ ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். உங்கள் காரியங்களை எல்லாம் நீதியாய்ச் செய்யுங்கள். நீதியுள்ள நீயாதிபதியாகிய ஆண்டவருக்கு முன்பு ஒரு நாள் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு காரியங்களையும் செய்யுங்கள். பூமியெங்கும் உலாவுகிற கர்த்தருடைய கண்கள் உங்கள் சகலக் காரியங்களையும் காண்கிறது என்ற உணர்வோடு வாழுங்கள். எல்லாத் தாறுமாறுகளையும் உங்களை விட்டு முடிவதுமாய் அப்புறப்படுத்துங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *