இருபுறமும் கருக்குள்ள பட்டயம்(Double-edged Sword):-

எபி 4:12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/b50JvoQ3RoU

வேத வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறது. மருத்துவர் நம்முடைய உடலை மேல்புறமாக பரிசோதிக்கிறார். அதே வேளையில் X Ray,ஸ்கேன் கருவிகள் ஊடுருவி போய் சரீரத்தில் இருக்கும் பாகங்களை பரிசோதிக்கும். அதுபோல தான் வேத வசனம் ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கும்படியாக உருவகுத்துகிறது. ஆசரிப்பு கூடாரத்தில் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் காணப்படுகிறது. அதுபோல தான் ஆவி ஆத்துமா சரீரம் நமக்குள்ளாக காணப்படுகிறது. சரீரம் பிரகாரத்தை போலவும், ஆத்துமா பரிசுத்த ஸ்தலத்தை போலவும், ஆவி மகா பரிசுத்த ஸ்தலத்தை போலவும் காணப்படுகிறது. தேவ வார்த்தை ஆத்துமா ஆவிக்குள்ளாக ஊடுருவி சென்று பிரிக்கிறதாய் காணப்படுகிறது. நாம் மனிதனுடைய சிந்தனையின் படியல்ல, ஆவிக்குரிய சிந்தனையால் செயல்படும் படி செய்கிறது. மனிதனுடைய சிந்தை வெளியில் பார்ப்பதற்கு நன்றாக தோன்றும். ஆனால் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் ஆவிக்குரியவண்ணம் சிந்திக்கும்படியாக வேத வசனம் உருவ குத்தும்.

வேத வசனம் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் காணப்படுகிறது. அதாவது மூட்டுகள் மற்றும் எலும்புகளையும் உருவ குத்தி பிரிக்கிறதாய் காணப்படுகிறது. எசேக்கியேலின் நாட்களில் உலர்ந்த எலும்புகளும் உயிரடையும் படி செய்தது தேவனுடைய வார்த்தை. தேவ வார்த்தையை பேசின போது, அந்த வார்த்தை ஊடுருவி பாய்ந்து செத்துப்போன எலும்புகளெல்லாம், ஒன்று சேர்ந்து, உயிரடைந்து, ஒரு சேனையாக எழும்பியது.

வேத வசனம் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை நம்முடைய இதயத்திற்குள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல ஊடுருவி சென்று நம்முடைய இருதயத்தின் யோசனைகளையும், சிந்தைகளையும் வெளிப்படுத்துகிறது. நம்முடைய இருதயத்தின் எண்ணம், அதன் நோக்கம், அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது. புதிய உடன்படிக்கையில் நம்முடைய எண்ணமும் நோக்கமும் உயர்த்தவைகளாக பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராக இருக்கிறார். பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேல் ஜனங்கள் வெளிப்புறத்தில் செய்கிற பாவத்தினால் உணர்த்தப்பட்டு, நியாயப்பிரமணத்தின்படி தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிற நாமோ, பழைய உடன்படிக்கையை காட்டிலும் மேலாக நம் இருதயத்திலிருக்கும் சிந்தைகளும், நோக்கங்களும் கூட பரிசுத்தமாக இருக்கும்படியாக இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக வேத வசனம் ஊடுருவி பாய்ந்து உணர்த்துகிறது.

ஆகையால் தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் கிரியை செய்யும்படி அனுதினமும், அநேக நேரம் வார்த்தையை தியானிக்க உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *