அவர் சொல்ல ஆகும்.

அவர் சொல்ல ஆகும்,  அவர் கட்டளையிட நிற்கும் (சங். 33:9).

கர்த்தருடைய வார்த்தையினால் காண்கிறவை அத்தனையும் உண்டாக்கப்பட்டது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கூறினார்,  உடனடியாய் வெளிச்சம் உண்டானது. அப்படியே,  கர்த்தர் பேச ஆகாய விரிவும் வெட்டாந்தரையும் மற்றவை எல்லாம் உண்டானது. அவர் காற்றையும் கடலையும் பார்த்து இரையாதே,  அதைதலாயிரு என்று கூறின வேளையில் கொந்தளிப்புகள் அடங்கி அமைதி உண்டானது. அசுத்த ஆவிகளைப் பார்த்துப் புறப்பட்டு போ என்று கட்டளையிட்டு அதட்டியவுடன் அப்படியே அவைகள் சரீரங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றது. கர்த்தருடைய வார்த்தையில் ஆவியும்,  ஜீவனும்,  வல்லமையும் காணப்படுகிறது. அவர் சொல்ல எல்லாம் ஆகும்,  அவர் கட்டளையிடுகிற வண்ணம் சகலமும் நடக்கும்.

கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றினார். ஆபிரகாமைப் பார்த்து நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றார்,  அவன் கீழ்ப்படிந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே  புறப்பட்டுச் சென்றான். ஆகையால் அவனை ஆசீர்வதித்து,  பெரிய ஜாதியாக்கி,  அவன் பெயரைப் பெருமைப்படுத்தினார்.  யாக்கோபு பதான்அராமிற்கு போகிற வழியில் கர்த்தர்  அவனைச் சந்தித்து,  நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும், நீ மேற்கேயும்,  கிழக்கேயும்,  வடக்கேயும்,  தெற்கேயும் பரம்புவாய், உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து,  நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து,  இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்,  நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். கர்த்தருடைய வார்த்தையின்படியே அவனுக்குச் செய்தார். நூற்றுக்கதிபதியும் கூட கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையை அறிந்தவனாயிருந்தான். ஆகையால் இயேசுவைப் பார்த்து நீர் என்னுடைய வீட்டிற்கு வரவேண்டாம்,  ஒருவார்த்தையை மாத்திரம் சொல்லும்,  என்னுடைய வேலைக்காரன் பிழைப்பான் என்றான். உன்விசுவாசத்;தின்படி உனக்கு ஆகக்கடவது என்று கர்த்தர் கூறின அந்த வேளையிலேயே வேலைக்காரன் சுகமடைந்தான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,  கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்வார்த்தைகள் எல்லாவற்றையும் இந்த புதிய மாதத்தில் உங்களுக்காக நிறைவேற்றுவார்.  ஆபிரகாமுக்கு உண்டான அத்தனை ஆசீர்வாதங்களும்,  கிறிஸ்து இயேசுவினால் உங்களுக்கு  வரும். உங்களுக்கு எதிராகக் காணப்படுகிற எல்லா கொந்தளிப்புகளும் அவர் கட்டளையிட அட ங்கும். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களைக் குணமாக்குவார். அவருடைய சிறகின்கீழ் இருக்கிற ஆரோக்கியத்தினால் உங்களை மூடுவார். ஒடுக்குகிறவன் உங்களிடத்தில் கடந்துவருவதில்லை,  கர்த்தர் தம்முடைய வாயின் வசனமாகிய பட்டயத்தினால் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்,  உங்கள் சத்துருக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார். அவருடைய வார்த்தையைக் கட்டியாய் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே என்று அனுதினமும் அவரிடம் கேளுங்கள்,  அந்த ரேமா வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் சுதந்தரிக்கும் படிக்குச் செய்து,  உங்களை மகிழச்செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *