1 பேதுரு 1:7. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
பொன் இந்த பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும். அப்படியாக எடுக்கப்படும் போது அதை சுற்றிலும் பல உலோகங்கள் ஒட்டியிருக்கும். அதை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் சாதாரணமாக சோப்பை போட்டோ, ஆசிட் போட்டோ சுத்தம் செய்யமுடியாது. மாறாக அக்கினியினால் மாத்திரமே பொன்னை சுத்தம் செய்யமுடியும். பொன்னை காட்டிலும் விலையேறப்பெற்றது உங்கள் விசுவாசம். அந்த விசுவாசம் அக்கினியினால் சோதிக்கப்படும். நீங்கள் கடந்து செல்கிற பலவிதமான போராட்டங்கள், உபத்திரவங்கள் மத்தியிலும் கிறிஸ்துவுக்காக நீங்கள் வைராக்கியமாக நிற்கும்படியாக உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும். கர்த்தர் உங்களுக்கு சோதனையை அனுமதிக்கிறாரென்றால் அது உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்கு என்று அறிந்துகொள்ளுங்கள். கிறிஸ்தவர்கள் அநேகர் இன்று சுகபோகமாக வாழவேண்டும், ஒரு உபத்திரவங்களும் தங்களுக்கு வரக்கூடாது என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருப்பீர்களென்றால் உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு சுத்த பொன்னாக மாற நீங்கள் இடம்கொடுக்கவில்லை.
அநேக நாடுகளில் கிறிஸ்த்தவர்களுக்கு கல்லூரியில் படிக்க இடம்கொடுப்பதில்லை, கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கிற திரளான ஜனங்களை கர்த்தர் எழுப்பிக்கொண்டே தான் வருகிறார். வேதாகமத்தை கையில் எடுத்தால் ஏளனமாக பேசும் ஜனங்கள், ஜெபித்தால் தடைபண்ணுகிற பொல்லதவர்கள் மத்தியிலும் இயேசுவின் மீது வைத்திருக்கிற உங்கள் விசுவாசம் குறைந்துபோகாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் என்று பேதுரு சொல்லுகிறார். இயேசு சொன்னார்அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் (யோவா 20:29). இயேசு வாழ்ந்த காலத்தில் இயேசுவோடுகூட இருந்த பேதுரு, தோமா, யாக்கோபு, யோவான் போன்றவர்களை காட்டிலும் நீங்கள் பாக்கியவான்கள். அவர்களெல்லாம் இயேசுவை கண்ணார கண்டு, தொட்டு, கூட இருந்து, பார்த்து விசுவாசித்தவர்கள். ஆனால் நீங்களோ காணாதிருந்தும் இயேசுவை விசுவாசிக்கிறபடியால் அவர்களை காட்டிலும் பாக்கியவான்கள். ஆகையால் அக்கினியின் மத்தியில், உபத்திரவத்தின் மத்தியில் உங்கள் விசுவாசம் இன்னும் அதிகமாக காணப்படுமென்றால் இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org