1 பேது 2:13,14. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
மெய்யான கிருபையை உடையவர்கள் யாராக இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்ப்படிவதை ஒரு கடினமாக கருதமாட்டார்கள். பாவம் கலகத்திலிருந்து ஆரம்பித்தது. பிதாவாகிய தேவனால் நியமிக்கப்பட்ட பிரதான தூதன் பிதாவிற்கு விரோதமாக கலகம் உண்டாக்கினான், அதினால் அவன் சாத்தனாக விழுந்தான். மேலதிகாரத்திலிருக்கும் யாருக்கு விரோதமாக கலகத்தை உண்டாக்கினாலும் அது கர்த்தருடைய பார்வையில் சரியாக இருக்காது. வேலை ஸ்தலங்களிலிருக்கும் உங்கள் எஜமானுக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். சபையை நடத்துகிற உங்கள் போதகருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். போதகருக்கு விரோதமாக கலகத்தை உண்டாக்க நினைப்பவர்களை கண்டு அவர்களுக்கு விலகி இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் எல்லாருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது (1 சாமு 15:23) என்று வசனம் சொல்லுகிறது. இயேசு இந்த உலகத்திலிருக்கும்போது குறையுள்ள உலகத்துக்குரிய தாய் தகப்பனுக்கு கீழ்ப்படிந்திருந்தார்.
அந்நாட்களில் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட நீரோ மன்னன் கொடுமையானவனாக, துன்மார்க்கனாக வாழ்ந்து வந்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பேதுரு ஆவியானவரின் ஏவுதலால் எழுதுகிறார் ராஜாவைக் கனம்பண்ணுங்கள் என்பதாக. பழைய உடன்படிக்கையில் நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ண வேண்டும் (லேவி 19:32). ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் எல்லாரையும் கணம் பண்ண வேண்டும் (1 பேது 2:17).
பொதுவாக நல்ல அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவது சுலபமாக இருக்கும். அதேவேளையில் துன்மார்க்கமான அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவது கடினமாக தோன்றும். இருந்தாலும் கர்த்தருடைய சித்தம் நாம் எல்லாருக்கும் கீழ்ப்படியவேண்டியதே என்பதை கர்த்தருடைய ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். நியாயமற்ற தலைவர்கள், பொய் பேசுகிற அதிகாரிகள், உங்களுக்கு விரோதமாக எழும்புகிற அதிகாரிகள் யாராயிருந்தாலும் எல்லாருக்கும் கீழ்ப்படியுங்கள். அதுவே கர்த்தருடைய பார்வையில் பிரியமாயிருக்கும்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org