அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான் (லூக்கா 7:4).
கர்த்தர் தயவு செய்வதற்கு ஏற்ற பாத்திரங்களாகக் காணப்படவேண்டும். அவரிடத்திலிருந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாகக் கர்த்தருடைய ஜனங்கள் காணப்படவேண்டும். யூதர்களுடைய மூப்பர்கள் இயேசுவிடத்தில் வந்து நூற்றுக்கதிபதி தன் வேலைக்காரனுடைய சுகத்திற்காக வேண்டிக்கொண்டதை நிறைவேற்றுவதற்கு அவன் பாத்திரவானாய் காணப்படுகிறான் என்று ஆண்டவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்குக் காரணம் அவன் புறஜாதியாகக் காணப்பட்டிருந்தும் யூதர்களை நேசித்தான், ஒரு ஜெப ஆலயத்தையும் அவர்களுக்குக் கட்டிக்கொடுத்தான் என்றார்கள். ஆகையால் கர்த்தர் அவர்களுடைய வேண்டுதலையும், நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தையும் கண்டு அவனுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்.
சில வேளைகளில் நாம் செய்கிற நற்கிரியைகள் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் தயவு செய்வதற்குக் காரணமாய் அமைகிறது. சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தை உடையவர்களாய் நாம் காணப்படும் போது, கர்த்தர் நம்மை தீங்கு நாளில் விடுவித்து, பாதுகாத்து உயிரோடு வைப்பார், பூமியில் பாக்கியவானாய் காணப்படும் படிக்குச் செய்வார், நம்முடைய சத்துருக்களின் இஷ்டத்திற்கு ஒருபோதும் ஒப்புக்கொடுப்பதில்லை, வியாதியின் படுக்கை முழுவதையும் கர்த்தர் மாற்றிப் போடுவார்(சங். 41:1-3). யோபு தன் பாடுகளின் பாதையில், நண்பர்களாலும் ஏளனம் செய்யப்பட்ட வேளையில், கர்த்தரை நோக்கி சுமித்திரையான தராசிலே என்னை நிறுத்தி, என் உத்தமத்தை அறியும் என்று கூறினார். நான் முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன், விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப் பண்ணினேன், குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன், எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தேன் என்றார். ஆகையால் அவன் கர்த்தருடைய தயவைப் பெறுவதற்குப் பாத்திரவானாய் காணப்பட்டான், இரட்டிப்பான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் தயவு செய்வதற்கு ஏற்ற பாத்திரங்களாகக் காணப்படுங்கள். இயேசுவின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜனங்களை நேசியுங்கள், பாகுபாடு காட்டாதிருங்கள். மொழி, நிறம், இனம் என்பதை வைத்து ஒருவரிடமும் வெறுப்பைக் காட்டாதிருங்கள். சாலொமோனுடைய குமாரன் ரெகொபெயாம் தன் ஜனங்களை நேசியாதபடி, முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையும் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபருடைய வார்த்தைகளைக் கேட்டு, என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று இஸ்ரவேல் ஜனங்களோடு கூறினதால், தேசமே இரண்டாகப் பிரிந்தது, தங்கள் மேல் ராஜாவாக இராதபடிக்கு இஸ்ரவேல் ஜனங்கள் அவனைத் தள்ளினார்கள். அதுபோல கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுங்கள், இடித்துத் தள்ளாதிருங்கள். அனேக கிறிஸ்தவர்களுடைய செய்கைகள் ஊழியங்களை இடிப்பதாகக் காணப்படுகிறது. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார், ஆகையால் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யாதிருங்கள், அப்படிப்பட்டவர்களோடு ஐக்கியம் கொள்ளாதிருங்கள். அப்போது கர்த்தர் தயவு செய்வதற்கு ஏற்ற பாத்திரங்களாய் நீங்கள் காணப்படுவதினாலே, கர்த்தர் உங்களுக்கு தயை செய்து, உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar