1 யோவா 4:8-9. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
சிறிய பிள்ளை சொல்லுவான் எனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிரியம், இளைஞர்கள் சொல்லுவார்கள் எனக்கு என் ipad என்றால் மிகவும் பிரியம், மனைவி சொல்லுவாள் எனக்கு பட்டு சேலை என்றால் மிகவும் பிரியம், கணவன் சொல்லுவான் எனக்கு என் வாகனம் மீது அதிகமான பிரியம் என்பதாக. இந்த உலகத்தில் பொதுவாக அன்பு நான்கு விதமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
Eros (ஈரோஸ்) என்று சொல்லக்கூடிய அன்பு காணப்படுகிறது. அது காதலர்களுக்குள்ளே இருக்கும் அன்பு. இவ்வகையான அன்பு ஒன்றுமே கொடுக்காது ஆனால் முழுவதுமாக எதிர்பார்க்கும். அதாவது 0% கொடுக்கும் ஆனால் 100% எதிர்பார்க்கும். இப்படிப்பட்ட அன்பு உடையவர்களாக தேவ பிள்ளைகள் காணப்படக்கூடாது.
Philia (பிலியா) என்று சொல்லக்கூடிய அன்பு காணப்படுகிறது. அது நண்பர்களுக்கிடையே இருக்கும் அன்பு. இவ்வகையான அன்பு பாதி கொடுக்கும் பாதி எதிர்பார்க்கும். அதாவது 50% கொடுக்கும், 50% எதிர்பார்க்கும். நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இதை செய்வேன் என்று சொல்லக்கூடிய அன்பு.
Storge (ஸ்டோர்ஜ்) என்ற சொல்லக்கூடிய அன்பு பெற்றோர்களின் அன்பு. இவ்வகையான அன்பு 80% கொடுக்கும் 20% எதிர்பார்க்கும். கடைசி காலத்தில் என் பிள்ளை என்னை பார்த்துக்கொள்ளுவான், நான் வயதான காலத்தில் இவன் என்னை பராமரித்துக்கொள்ளுவான் என்று எதிர்பார்க்கும் அன்பு.
இவைகளெல்லாவற்றிலும் மேலான ஒரு அன்பு காணப்படுகிறது. அதற்கு பெயர்தான் Agape (அகப்பே) என்னும் அன்பு. இந்த அன்பு தன்னலம் கருதாது, சுயநலம் இல்லாத அன்பு, கைம்மாறு கருதாத அன்பு, எதையும் தாங்கிக்கொள்ளும் அன்பு, எதையும் சகிக்கும் அன்பு. 0% தான் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் ஆனால் 100% கொடுக்கும். அப்படிப்பட்ட அன்பு தான் Agape (அகப்பே) என்னும் அன்பு. இந்த அன்பை செயல்படுத்தி காட்டியவர் இயேசுகிறிஸ்து ஒருவரே. அவர் இதை செயல்படுத்தி காட்டிய இடம், கல்வாரி சிலுவையில். இயேசு உங்களுக்காக அடிக்கப்பட்டு, பாடுபட்டு, முழு உலகத்தின் பாவமும், சாபமும் அவர் தோலின் மீது சுமக்கும்போது, உங்களை மீட்டெடுக்கும் படியாக முழு இரத்தத்தையும் ஊற்றி கொடுக்கும் போது, உங்களிடம் ஒன்றுமே எதிர்பார்க்கவில்லை. தேவ அன்பு உங்களுக்காக தன்னுடைய சொந்த குமாரனையே பலியாக கொடுக்கும்படியாக செய்தது. அந்த அன்பு மிகவும் பெரிய அன்பு. உலகத்தால் கொடுக்க கூடாத அன்பு. இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பதை போல, இயேசு உங்கள் மீது வைத்த அன்பும் ஒருநாளும் மாறாது. மனிதர்களின் அன்பு மாறலாம், குடும்பத்தினரின் அன்பு மாறலாம், சகோதர சகோதரிகளின் அன்பு மாறலாம், பிள்ளைகள் மனைவி கணவனின் அன்பு மாறலாம், வேலைத்தளங்களில் இருப்பவர்களின் அன்பு மாறலாம், ஆனால் இயேசுவின் அன்பு ஒருநாளும் மாறாது. இயேசு உங்கள் மீது அன்பாகவே இருக்கிறார். அது உங்கள் மீது இருக்கும் தன்னலமற்ற, சுயநலமில்லாத இயேசுவின் Agape (அகப்பே) என்னும் அன்பு. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது (1 கொரி 13:13).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org