லுக் 23:34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருக்கும்போது சொன்ன முதல் வார்த்தை பிதாவே, இவர்களுக்கு மன்னியும். சிறு பிள்ளைகள் தவறு செய்தால், நாம் எளிதாக மன்னித்துவிடுவோம். ஐந்து வயது குழந்தை வந்து தகப்பனிடம் தான் செய்த தவறுக்கு வருந்தும்போது, தகப்பன் எளிதாக மன்னித்துவிடுவார். அதுபோல தான் இயேசுவும் கூட எளிதாக மன்னிக்கும் இருதயத்தை உடையவராக இருக்கிறார். சுலபமாக நாம் சிறு பிள்ளைகளை மன்னிப்பதுபோல சிலுவையில் அவரை அறைந்தவர்களை எளிதாக மன்னிக்கும்படியாக பிதாவிடம் இயேசு சொல்லுகிறவராக காணப்படுகிறார்.
தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும், போர்ச்சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும்? அவர்கள் சிறு பிள்ளைகளா? விவரம் தெரியாதவர்களா? நன்மை எது தீமை எது என்று அறியாதவர்களா? நம் ஊரில் சொல்வதுபோல விரலை வாயில் விட்டால் கடிக்க தெரியாதவர்களா? இந்த ஜனங்கள் தான் கொடூர குற்றவாளியான பரபாசை விடுதலை செய்யும் படியாகவும், ஒரு குற்றமும் செய்யாத நன்மைகளை மாத்திரமே செய்து வந்த இயேசுவை சிலுவையில் அறையும் படியாகவும் சொன்ன ஜனங்கள். இவர்கள் எப்படி அறியாமல் செய்திருக்க முடியும்? காரணம் அந்த நேரத்தில் இருளின் ஆதிக்கம் ஜனங்களின் கண்களை குருடாக்கி வைத்திருந்தது. அந்தகார சக்திகள் பலமாக செயல்பட்டு கொண்டிருந்தன. தங்களுடைய சுபுத்தியை இருளின் ஆதிக்கம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. ஆகையால் தான் இயேசு சொன்னார் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சொன்னார். இன்றும் இயேசு இதே மாதிரியாக தான் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னிக்கும்படியாக பரிந்து பேசியவர், உங்கள் பாவங்களையும் நிச்சயமாக மன்னிப்பார்.
அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். வேத வாக்கியம் நிறைவேறும்படியாக இந்த காரியம் நடந்தது. சங்கீத புஸ்தகத்தில் தாவீது இதை முன்னறிவித்திருக்கிறார். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள் என்பதாக (சங் 22:18).
இயேசுவின் இரத்தம் இவர்களை மன்னியும் என்றே இன்றும் உங்களுக்காக பரிந்து பேசுகிறது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org