இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்:-

லுக் 23:43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது சொன்ன இரண்டாம் வார்த்தை இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய். உலகத்தில் தோன்றின ஒரு மனுஷனாலும் சொல்ல முடியாத வார்த்தை. இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது இரண்டு கள்ளர்கள் இயேசுவின் வலதுபுறத்தில் ஒருவனும், இடதுபுறத்தில் ஒருவனும் சிலுவையில் தொங்கினார்கள். கள்ளர்கள் இருவரும் குற்றவாளிகள், தண்டனையை பெற்றுக்கொள்ளுவதற்கு பாத்திரவான்கள். ஆனால் இயேசுவோ ஒரு குற்றமும் செய்யாதவராக இரண்டு கள்ளர்களின் மத்தியில் சிலுவையில் தொங்கினார்.

இந்த இரண்டு கள்ளர்களும் வெவ்வேறு விதமானவர்கள் என்பதை நாம் கவனித்து பார்க்கவேண்டும். சிலுவையில் தொங்கின இரண்டு கள்ளர்களின் ஒருவன் தன்னுடைய மரண தருவாயிலும் மனம் திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு ஆயத்தமில்லாமல் தன்னுடைய இருதயத்தை கடினப்படுத்தினான். நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றொரு கள்ளன் தன்னுடைய மரண தருவாயில் இயேசு யார் என்பதை விளங்கிக்கொண்டான். இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டி என்பதை கண்டுகொண்டான். இயேசு ஒரு நீதிமான், உலகத்தின் பாவத்தையும் சாபத்தையும் தன் மீது இயேசு ஏற்றுக்கொண்டார் என்பதை அறிந்துகொண்டான். ஆகையால் தான் இந்த கள்ளன் மற்ற கள்ளனை பார்த்து கடிந்து கொண்டு நாம் குற்றம் செய்து தண்டிக்கப்படுகிறோம், ஆனால் இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று சொன்னான். அந்த கள்ளன் இயேசுவை நோக்கி ஒரு ஜெபத்தை ஏறெடுத்தான் ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

இப்படியாக தான் இந்த உலகத்தில் இரு வகையான ஜனங்கள் காணப்படுகிறார்கள். ஒன்று மரண தருவாயில் கூட இயேசுவை கண்டுகொள்ளாமல் பாதாளத்திற்கு நேராக செல்லும் திரள் கூட்ட ஜனங்கள், மற்றொன்று கடைசியில் கர்த்தர் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஜனங்கள். மரணம் ஒருவனுக்கு எப்பொழுது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆகையால் தான் இப்பொழுதே நாம் ஒவ்வொருவரும் இந்த கள்ளனை போல மனம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராக இருக்கிறார். மனம் திரும்பின அந்த கள்ளனிடம் இயேசு சொன்னார் இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்பதாக. ஒரு கள்ளன் தனக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியதை சரியாக பயன்படுத்திக்கொண்டான். மற்றொரு கள்ளன் தனக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டான்.

பவுல் இந்த உலகத்திலிருக்கும்போதே பரதீசுக்கு தான் எடுக்கப்பட்டதை ஒருமுறை விவரிக்கிறார் (2 கொரி 12:4). யோவானுக்கும் ஆண்டவர் வெளிப்படுத்தும்போது ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது (வெளி 2:7) என்று சொல்லுகிறார்.

கள்ளனை பரதீசுக்குள்ளாக சேர்த்துக்கொண்ட இயேசு உங்களையும் சேர்த்துக்கொள்ளுவார். ஒரு கள்ளன் மனம் திரும்பியதை போல நீங்களும் மனம் திரும்புங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *