இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார் லூக்கா 24:15.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/xTH0z763dcc
இயேசு உயிர்தெழுந்த நாளின் காலையில் மகதலேனா மரியாளுக்கும் மற்ற ஸ்திரீகளுக்கும் தரிசனமானார். அவருடைய உயிர்த்தெழுதலின் செய்தியை ஸ்திரீகள் சீஷர்களிடமும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். அவர்களோ ஸ்திரீகளுடைய வார்த்தையை நம்பவில்லை. ஆகையால், அன்றைய தினமே அவர்களில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து எம்மாவூர் என்ற கிராமத்திற்கு நடந்து போனார்கள். சோர்ந்துபோனவர்களாய், நம்பிக்கையிழந்தவர்களாய், பின் மாற்றத்தின் நடக்கையாய் அது காணப்பட்டது. அப்போது உயிர்தெழுந்த இயேசு அவர்களுடனே சேர்ந்து நடந்தார், அவர்கள் அவரை இயேசு என்று அறியக்கூடாதபடிக்கு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் எப்போதும் உங்களோடு கூட இருப்பார். அவர் உங்கள் நிலைமைகளை அறிந்தவர். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. இயேசு அவர்களை நோக்கி, நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். எல்லாவற்றையும் அறிந்த ஆண்டவராயிருந்தும், அவர்கள் மூலம் சோர்வுக்கான காரணங்களை அறிய விரும்பினார். அதுபோல, உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் சோர்வைக் கொண்டுவருகிற காரியங்களை நீங்கள் அவரிடம் கூறவேண்டும் என்று விரும்புகிறார்.
எம்மாவூர் சீஷர்கள் எருசலேமில் நடந்த நசரேயனாகிய இயேசுவைக் குறித்த எல்லாக் காரியங்களை அவரிடம் கூறினார்கள். அவர் தேவனுக்கு முன்பாக செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டு ரட்சிக்கிற மேசியா என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது என்றார்கள். அத்துடன் எங்களைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அவர் உயிரோடிருக்கிறார் என்று கூற எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள் என்றார்கள். உடனே உயிர்தெழுந்த இயேசு வேதத்தில் அவரைக் குறித்து எழுதப்பட்ட வேதவாக்கியங்களை விவரித்து அவர்களுக்குக் காண்பித்தார். உயிர்தெழுந்த ஆண்டவர் வேத வசனத்திற்கு நேராக நம்மைத் திருப்புகிறவர். கர்த்தருடைய வார்த்தை நம்மை உயிர்ப்பிக்கும் வல்லமை பெற்றது, சோர்விலிருந்தும், பின் மாற்றங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க வல்லமையுள்ளது.
அவ்வேளையில் அவர்கள் போகிற எம்மாவூர் கிராமத்திற்குச் சமீபமானார்கள், அந்த வேளையில் இயேசு இன்னும் தூரம் போகிறவர்போல தன்னைக் காண்பித்தார். ஆனால் அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். உயிர்தெழுந்த ஆண்டவர் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளுகிறவர். நீங்கள் அவரை வருந்தி அழைத்தால் அவர் உங்கள் வீட்டில் வந்து உங்களோடு தங்குவார், அழையாத இடத்தில் அவர் வருவதில்லை. என் வாழ்க்கையில் வாரும், குடும்பத்தில் வாரும், சபையில் வாரும், என்று அழைக்கும் போது அவர் வருவார். பின்பு, அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவை அறிந்தார்கள், உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அழைத்தவர்கள் போஜனத்தைப் பரிமாறுவது தான் வழக்கம், ஆனால் இங்கே விருந்தினரே பரிமாறுகிறதைப் பார்க்கமுடிகிறது. உயிர்தெழுந்த ஆண்டவர் உங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறவர். நோய்களை உங்களிடத்திலிருந்து விலக்குகிறவர். உயிர்தெழுந்த ஆண்டவர் பரிமாறிக்கொண்டிருக்கும் போது, சீஷர்களுடைய கண்கள் திறந்தது. ஒருவேளை ஆண்டவருடைய கரங்களில் காணப்பட்ட வடுக்களை அவர்கள் கண்டிருக்கக் கூடும். தேவ ஜனமே, உயிர்தெழுந்த ஆண்டவர் உங்கள் கண்களைத் திறக்கிறவர். வேதத்தின் மகத்துவங்களை அறியும் படிக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை உங்களுக்குத் தருகிறவர். அப்பொழுதே எம்மாவூர் சீஷர்களுடைய விசுவாசம் உயிர்ப்பிக்கப்பட்டது. உடனே அவர்கள் வந்த பட்டணமாகிய எருசலேமுக்கு திரும்பிச் சென்று நடந்த சம்பவங்களையும், உயிர்தெழுந்த ஆண்டவரைக் கண்டதையும் மற்ற சீஷர்களுக்கு அறிவித்தார்கள். அதுபோல உயிர்தெழுந்த ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை உங்கள் விசுவாத்தை உயிர்ப்பிக்கும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பின்னிட்டு பாராதபடிக்கு முன்னோக்கிச் செல்லுபடிக்குச் செய்யும். உயிர்தெழுந்த ஆண்டவருடைய சமாதானமும், ஆசீர்வாதங்களும் உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்பட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar