1 இராஜா 19:19. அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
பெலவீனமான பாத்திரத்திற்கும், சோம்பேறியான பாத்திரத்திற்கும் வித்தியாசமுண்டு. கர்த்தர் பெலவீனமான பாத்திரங்களை அவருடைய ஊழியத்திற்கென்று தெரிந்தெடுப்பதுண்டு. மோசே, எலியா போன்றோர்களெல்லாம் பெலவீனர்கள், ஆனால் கடினமான உழைப்பாளிகள். கர்த்தருக்காக எதையும் சாதிக்க துணிந்தவர்கள்.
கர்த்தர் எலியாவிடம் தன்னுடைய ஸ்தானத்தில் எலிசாவை அபிஷேகம்பண்ணு என்று சொன்னார். முதன் முதலாக எலியா எலிசாவை பார்க்கிறபோது அவன் கடினமாக வேலை செய்து கொண்டிருந்தான். பன்னிரண்டு ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தான். கர்த்தர் ஒருபோதும் தன்னுடைய ஊழியத்திற்கு சோம்பேறிகளை அழைப்பதில்லை. இவ்வுலகத்தில் தங்களுடைய வேலையை செய்யும் போது யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்களை தெரிந்தெடுக்கிறார். மோசே தன்னுடைய மாமனாரின் மந்தைகளை உத்தமத்தோடு பார்த்துக்கொண்டு வந்தான். தாவீது கரவலாடுகளை சரியாக மேய்த்து, எதிராக வந்த சிங்கத்தையெல்லாம் கொன்றுபோட்டான். ஆமோஸும் கடினமான வேலைக்காரன். கிதியோன் வேலை செய்துகொண்டிருந்தபோது கர்த்தர் பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார். பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா போன்றோர்கள் கடினமாக மீன்பிடி வேலையை செய்து வந்தவர்கள். பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி, எங்கேயும் கர்த்தர் சோம்பேறிகளை தெரிந்தெடுத்தார் என்று பார்க்கமுடியாது.
எலியா எலிசாவை பார்க்க சென்றபோது அவன் தூங்கி கொண்டிருக்கிறவனாக காணப்படவில்லை. இயேசு பேதுருவை அழைத்த போது அவன் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவன் கடினமாக வேலை செய்துகொண்டிருக்கும்போது அழைத்தார். இதையெல்லாம் நாம் பார்க்கும்போது ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் எந்த வேலையானாலும் சரி, அதை உத்தமத்தோடு, கடின உழைப்போடு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு மாதிரியாக வேலையை செய்ய வேண்டும். பூமிக்குரிய காரியங்களில் நாம் உத்தமமாய் காணப்படவில்லையென்றால், எப்படி கர்த்தர் தேவ இராஜ்யத்துக்குரியவைகளை செய்யும்படியாக நம்மிடம் வேலையை கொடுப்பார்?
ஆண்கள் நன்கு வேலை செய்து குடும்பத்தை நடத்த வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அடங்கி வேலை செய்ய வேண்டும். எலிசா பன்னிரண்டு ஏர்பூட்டி வேலை செய்தபோது எலியா அவன் மீது சால்வையை போட்டான். சோம்பலை களைத்து சுறுசுறுப்பாக வேலைசெய்ய உங்களை பழக்குவியுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org