2 கொரி 1:5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
சிலிசியா நாட்டில் ஜெனோபியஸ் என்ற ஊழியக்காரரும் அவருடைய தங்கையும் கர்த்தருடைய ஊழியத்தை கி.பி 285ல் செய்துவந்தார்கள். அதை பார்த்த ரோம அதிபதி அவர்கள் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தினான். இந்த சூழ்நிலையில் உலகத்திலுள்ள சகல ஆஸ்திகளிலும், கனத்திலும் மேலாக நான் இயேசுவை நேசிக்கிறேன், காரணம் இயேசு எனக்காக பாடுபட்டார், மரணம் நேர்ந்தாலும் அதை இலாபமாக கருதுகிறேன் என்று தைரியமாக ஜெனோபியஸ் கூறினார். ரோம சக்ரவர்த்தியை பின்பற்றி, ரோம தெய்வங்களை வணங்க நீ இணங்கவில்லையென்றால் மரணமே உனக்கு நேரிடும் என்ற பயமுறுத்தல்களுக்கு ஜெனோபியஸ் அஞ்சவில்லை.
ரோம அதிபதி ஜெனோபியஸை சித்திரவதை செய்யும் கருவியில் வைத்து துன்புறுத்தினான். இதை கண்ட அவருடைய தங்கை தடுக்க முயன்ற போது, அந்த பெண்ணை தன் சகோதரனுக்கு முன்பாக நிர்வாணப்படுத்தி அவளை பழுக்கக் காய்ச்சிய இரும்பு படுக்கையின் மேல் தூக்கி எரிந்தனர். ஜெனோபியஸையும் பழுக்கக் காய்ச்சிய இரும்பு படுக்கையின் மேல் போட்டார்கள். ஆனால் இருவரையும் கர்த்தர் ஆட்கொண்டதால் அவர்களுக்கு ஒன்றும் நேரிடவில்லை. கோபமுற்ற ரோம அதிபதி அவர்கள் இருவரையும் கொதிக்கும் தண்ணீருக்குள் மூழ்கடியுங்கள் என்று சொன்னான். அதுவும் அவர்கள் இருவரையும் சேதப்படுத்தவில்லை. கடைசியாக இருவரின் தலையையும் ரோம அதிபதி துண்டித்துப்போட்டன். அவர்கள் இருவரும் கிறிஸ்துவின் பாடுகள் தங்களிடத்தில் பெருகும்படியாக ஒப்புக்கொடுத்தார்கள். இன்றும் அவர்களுடைய சாட்சி அநேகருக்கு பாடமாக இருக்கிறது.
ஏதோ ஒரு கடினம் வந்தவுடன் அதை விட்டு ஓடிப்போவது கிறிஸ்துவ ஜீவியம் இல்லை. இயேசுவை ஏற்றுக்கொண்டால் மற்றவர்கள் என்னை நிந்திப்பார்கள், இயேசுவுக்காக ஊழியம் செய்வது கடினம் என்று சொல்லி ஓடுவது கிறிஸ்துவ ஜீவியம் இல்லை. மாறாக என்ன வந்தாலும் கிறிஸ்துவின் பாடுகள் எனக்குள் பெருகட்டும் என்று உறுதியான தீர்மானத்துடன் வாழ்வது தான் கிறிஸ்துவ ஜீவியம். கிறிஸ்து இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இந்த உலகத்தில் பாடுபட்டார். அவர் பட்ட பாடுகள் அநேகருக்கு ஆறுதலை கொண்டுவந்தது. சிலுவையில் அநேக பாடுகளை சகித்தார். வசனம் சொல்லுகிறது ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது ( 2 கொரி 1:6) என்பதாக. ஆகையால் கிறிஸ்துவின் பாடுகள் உங்களுக்குள் பெருகும் போது, ஆறுதலும் பெருகும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org