வழிகளிலே நின்று பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து நல்ல வழி எங்கே என்று பார்த்து அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள் (எரே. 6:16)
ஒட்டப்பந்தயத்தில் ஓடுகிற வீரன் இலக்கை நோக்கி, பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓடுவான். கிறிஸ்தவ ஜீவியமும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒரு வீரனுக்கு ஒப்பாகக் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் கூட ஆசையாய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் என்றான். நாமும் இலக்கை நோக்கி முன்னோக்கி ஓடும் போது வேதம் காட்டுகிற பூர்வ பாதைகளையும், முற்பிதாக்களும் அப்போஸ்தலர்களும் செம்மையாய் ஓடி விட்டுச்சென்ற மாதிரிகளையும் பார்த்து நாம் ஓடவேண்டும் என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. அப்போது சமாதானத்தின் ஜீவியம் செய்ய முடியும், ஆத்துமாக்களிலும் தேவனுடைய இளைப்பாறுதல் காணப்படும். சமாதானமுள்ள வாழ்க்கை தேவன் கொடுக்கிற பெரிதான ஆசீர்வாதமாகக் காணப்படுகிறது.
உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது காரியங்களை அறிமுகப்படுத்துகிறது. அதுபோல கிறிஸ்தவமும் புதுவகையான ஆராதனைகளையும், வியாக்கியானங்களையும், மக்களை கர்ச்சிக்கிற பாடல்களையும், நடனங்களையும் காண்பிக்கிறது. மதத்தலைவர்கள் கர்த்தருடைய வேதம் பழைய புஸ்தகம் இக்காலத்திற்கு ஒவ்வாதது என்று சொல்லி அதைக் காலத்திற்கேற்ப திருத்தி எழுத வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். அத்தேனே பட்டணத்து ஜனங்கள் நூதன காரியங்களைச் சொல்வதையும், நவமான காரியங்களைக் கேட்பதிலும் பொழுதைக்கழித்தது போல இக்காலக் கிறிஸ்தவ ஜனங்களும் புதிய புதிய காரியங்களைக் கேட்கவேண்டும் என்பதிலேயே வாஞ்சையாகக் காணப்பட்டு, அப்படிப்பட்ட காரியங்களில் பொழுதைக்கழிக்கிறார்கள்.
வழிகளிலே நில்லுங்கள் என்று வேதம் கூறுகிறது. இங்கே வழிகள் என்று குறிப்பிடுவது நாற்சந்தியாகக் காணப்படுகிறது தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலையைக் குறிப்பிடுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட நாற்சந்திகளால் நிறைந்ததாகக் காணப்படுகிறது. படிப்பு திருமணம் வேலை எல்லாவற்றிலும் சரியான தீர்மானங்களையும் தேவனுக்கு சித்தமானவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். தவறான தீர்மானங்களை எடுத்தால் அவைகள் வாழ்க்கையில் வேதனையைக் கொண்டுவந்து விடும். மனுஷனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழிகள் உண்டு அவைகள் மரணவழிகள் என்றும் வேதம் எச்சரிக்கிறது. அப்படியென்றால் சரியான வழிகளைத் தெரிந்து எடுப்பது எப்படி, பூர்வ பாதைகளைக் அறிந்து கொள்ள வேதத்தை வாசியுங்கள், ஆலயத்திற்கு போங்கள், ஆலயத்தில் கர்த்தர் தம்முடைய வழிகளை உங்களுக்கு போதிப்பார். கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார் நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்(ஏசா.1:2 3) என்று வேதம் கூறுகிறது. பூர்வ பாதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் காணப்படுமே என்றால் அதில் நல்லதைத் தெரிந்தெடுங்கள். யூதாவின் ஜனங்கள் நாங்கள் நடக்கமாட்டோம் என்று முரட்டாட்டம் பண்ணினது போல நீங்கள் காணப்படாதிருங்கள், பதிலாகக் கர்த்தருடைய வழிகளில் நடக்க உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். பூமியிலும் சமாதானத்தின் ஜீவனம் செய்யமுடியும் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது, நித்தியத்திலும் ஆண்டவரோடு இளைப்பாற முடியும். சமாதானத்தின் தேவன் இந்த புதிய மாதம் முழுவதும் உங்களை நடத்தி கண்மணி போலக் காத்தருளுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar