அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏரேமியா 1:19).
எரேமியா தீர்க்கனுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாக மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. அவருடைய ஊழிய அழைப்பு விஷேசமானது, தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே அவரை அறிந்து, கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே அவரை பரிசுத்தம்பண்ணி, ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கர்த்தர் கட்டளையிட்டார். ஆகையால் சுமார் நாற்பது வருடங்கள், யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களுடைய நாட்களில் தீர்க்கதரிசனம் கூறினார். யோசியா என்ற நல்ல ராஜாவுடைய நாட்களில் சுமார் பதினெட்டு வருடமும், அவனுக்கு பின்பு தோன்றின யோவகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா என்ற நான்கு பொல்லாத ராஜாக்களுடைய நாட்களிலும் தீர்க்கதரிசனம் கூறினான்.
எரேமியாவிற்கு விரோதமாக யுத்தம்பண்ணுவதற்கு ஒரு கூட்ட ஜனங்கள் காணப்பட்டார்கள். நாம் ஒருவேளை நினைக்கலாம் அவர்கள் புறஜாதிகளாகக் காணப்படுவார்கள் என்று. ஆனால் அவனுக்கு விரோதமாக எழும்பினவர்கள் அவனுடைய சொந்த ஜனங்களாகிய யூதாவின் ராஜாக்களும், பிரபுக்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களும் என்று வேதம் கூறுகிறது. மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார் தானே என்றும் வசனம் சொல்லுகிறது. எரேமியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு யூதாவின் ஜனங்கள் செவிகொடுக்கவில்லை, ஆசாரியனானும், ஆலயத்துப்பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் அவனை அடித்து, காவலறையிலே போட்டான், எருசலேம் நகரத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னதினாலே ஆக்கினைக்குப் பாத்திரன் என்று தீர்ப்பளித்தார்கள், கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் அடங்கிய அவனுடைய சுருளை ராஜா சூரிக்கத்தியினால் அறுத்து, சுருளனைத்தும் அக்கினியிலே வெந்துபோகும்படி எறிந்தான், உளையான சேற்றால் நிறைந்த துரவிலே இறக்கிவிட்டு அமிழ்ந்துபோகும்படிக்கு செய்தார்கள், கடைசியாக எரேமியாவிற்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டினார்கள். கர்த்தருடைய அழைப்பைப் பெற்று அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்தை கண்ணீரோடு செய்தான், தன் ஜனங்கள் எழுபது வருடம் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குள்ளாக கடந்து சென்றுவிடக்கூடாது என்று பாரத்தோடு அழுது புலம்பினான், இருந்தும் அவனுடைய சொந்த ஜனங்கள் அவனுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்களே ஒழிய அவன் வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.
கர்த்தர் அவனைக் காக்கும்படிக்கு அவனுடன் இருந்தார், அவன் வாயைத்தொட்டு அவருடைய வார்த்தையை அவன் வாயில் வைத்தார், அவனை அரணிப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல அலங்கமுமாக்கி அவனுடன் இருந்தார். ஆகையால் ஒருவராலும் அவனை மேற்கொள்ளமுடியவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே, உத்தமமாய் கர்த்தரை பின்பற்றுங்கள், சாட்சியின் ஜீவியம் செய்யுங்கள், அவருடைய ஊழியத்தை உண்மைiயாய் செய்யுங்கள், அழைப்பிலே நிலைத்திருங்கள், ஒருவனும் உங்களை ஒருநாளும் மேற்கொள்ள முடியாது. உங்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவார்கள், ஊழியங்களுக்கும் சபைக்கும் விரோதமாய் பாதாளத்தின் வாசல்கள் யுத்தம் செய்யும், ஆனால் ஒன்றும் உங்களை ஒருநாளும் மேற்கொள்ளமுடியாது. எரேமியா நன்றி நிறைந்த இருதயத்தோடு சொன்னான், கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார் என்று. அதுபோல உங்களோடும், உங்கள் ஊழியங்களோடும் பயங்கரமான பராக்கிரமசாலியாய் உடனிருப்பார், ஒருவனும் உங்களை மேற்கொள்ளுவதில்லை, உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar