லூக் 17:36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வயல் என்பது கர்த்தருடைய ஊழிய ஸ்தலத்தை குறிக்கிறது. இஸ்ரவேல் தேசத்தில் முன்மாரி மழை பெய்யும்போது, தரிசு நிலங்களை உழுது, வயல்களிலே தானியங்களை விதைப்பார்கள். ஆதி அப்போஸ்தலருடைய காலங்களில் முன்மாரி மழை பெய்தது. அப்போது அவர்கள் தேசங்களுக்கு சென்று சுவிசேஷம் என்னும் விதையை விதைத்தார்கள். பவுல் ஐரோப்பா கண்டமெல்லாம் சென்று சுவிசேஷம் என்னும் விதையை விதைத்தான். பல மிஷனரிகள் இந்திய தேசத்திற்கு வந்து சுவிசேஷத்தை விதைத்தார்கள். இரத்த வேர்வை சிந்தி உழைத்தார்கள். பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், ஆலயங்களை மிஷினரிகள் கட்டினார்கள். அவர்கள் விதைத்த விதை பல பலனை கொண்டுவந்தது. இப்போதும் இயேசு சொல்லுகிறார் தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார் (மத் 9:37). கர்த்தருடைய பெரிதான கிருபையினால் அநேக இடங்களில் இன்று சுவிசேஷம் விதைக்கப்பட்டு வருகிறது. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14).
வேசிகளிடத்தில் தன் ஆஸ்தியை செலவழித்துப்போட்ட கெட்டகுமாரன் எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான் (லூக் 15:14,15). அந்த குடியானவனுக்கு வயல் இருக்கிறது. ஆனால் வயலில் கோதுமையில்லை, நெல் இல்லை, கரும்பு இல்லை ஆனால் பன்றி மட்டும் இருந்தது. பன்றி எவ்வளவுதான் கழுவினாலும் பாவ சேற்றுக்குள் செல்லும் அசுத்தமான பிராணி. ஆனால் மூத்த மகன் இருந்த வயலில் தானியம் இருந்தது. அறுவடை இருந்தது.
நீங்கள் எந்த வயலில் நின்று கொண்டிருக்கிறீர்கள்.? உலக ஆபாச வயலில் பன்றியோடு நிற்கிறீர்களா? அல்லது கர்த்தருடைய வயலில் அறுவடை பணியில் நிற்கிறீர்களா? பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார் (சங் 50:5).
கர்த்தருடைய வருகை மிக சமீபமாகிவிட்டது. இயேசுவை சந்திக்க ஆயத்தப்படுவோம். இதுவரை எவ்வளவோ காரியங்களில் நம்முடைய நேரத்தை வீணடித்துவிட்டோம். இப்பொழுதே மனம் திரும்பி இயேசுவோடு ஒப்புரவாகிவிடுவோம்.
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:11,12).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org