இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை (எரேமியா 4:1).
இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாக மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. அவர்கள் பாபிலோனியச் சிறையிருப்பிற்குக் கடந்து செல்வதற்கு முன்பாகவே கர்த்தர் உன் அருவருப்புகளாகிய பாகாலின் கிரியைகளை உன்னைவிட்டு அகற்றி, மனம்திரும்பி என்னிடமாக திரும்புவாயானால் நீ இனி அலைந்து திரிவதில்லை என்று வாக்குக் கொடுத்தார்.
சங்கீதக்காரனாகிய தாவீது, என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது என்றான். சவுல் அவனைத் துரத்த, இவன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடமாக அலைந்து திரிகிறவனாகக் காணப்பட்டான், அது அவனுடைய மீறுதலினால் உண்டான அலைச்சல் அல்ல, கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட அலைச்சலாகக் காணப்பட்டதினால், கடைசியில் அது அவனுக்கு ஆசீர்வாதமாக முடிந்தது. ஆண்டவர் அவனைச் சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக உயர்த்தி ஆசீர்வதித்தார். அதுபோல ஒருநாள் சாராள் ஆபிரகாமை நோக்கி, அடிமைப் பெண்ணாகிய ஆகாரையும் அவள் குமாரனாகிய இஸ்மவேலையும் துரத்திவிடும், என் குமாரனாகிய ஈசாக்கோடே அவன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான், அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த கொஞ்சம் தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். அவனை ஆசீர்வதித்து பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குக் கொடுத்து அப்படியே செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் சில வேளைகளில் உங்களுடைய வாழ்க்கையில் அலைச்சல்களை அனுமதிக்கும் போது, அதை ஆசீர்வாதமாக முடியப்பண்ணுவார்.
யூதாவின் குடிகள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் கடந்துசென்று அங்கு அடிமைகளாக எழுபது வருடங்கள் அலைந்து திரிந்தார்கள், அது அவர்களாகவே தங்களுக்கு என்று ஏற்படுத்திக்கொண்ட தீங்கு. எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் தன்னுடைய வார்த்தைகளை அனுப்பி அவர்களைப் பலமுறை எச்சரித்தார். யூதாவை துரோகி என்று நான்கு முறை எரேமியா மூன்றாவது அதிகாரத்தில் (வசனம் 7,8,10,11) கர்த்தர் அழைக்கிறதைப் பார்க்கமுடிகிறது, காரணம் கர்த்தரைத் தள்ளி அனேக நேசர்களைத் தங்களுக்குத் தெரிந்து கொண்டு, நரகலான அருவருப்புகளை ஆராதித்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, வீணான அலைச்சல்கள் காணப்படுகிறதா? வேலைகளில் ஸ்திரமில்லாமல் காணப்படுகிறீர்களா? ஒவ்வொரு நாடுகளாக மாறி மாறி அலைந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வழிகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களைச் சீர்படுத்திக்கொண்டு, மனம் திரும்பி தேவனண்டைச் சேருங்கள், அப்போது கர்த்தர் உங்கள் வீண் அலைச்சல்களை மாற்றி, நிலைப்படுத்தி உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar