யோபு 16:5. ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன்; என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
யோபின் நண்பர்கள் அவனுக்கு உண்டாயிருந்த நெருக்கத்தின் வேளையில், யோபை உடைத்து தள்ளினார்கள். முதலாவது நண்பன் எலிப்பாஸ் தான் தரிசனம் உடையவனை போல காண்பித்து மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? என்றெல்லாம் சொல்லி அவனை வேதனைப்படுத்தினான். இரண்டாவது நண்பன் பில்தாத் முன்னோர்களின் செய்திகள் எல்லாம் தனக்கு தான் தெரியும் என்று காண்பித்து மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம், அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போகும் என்று சொல்லி தாக்கினான். மூன்றாவது நண்பன் சோப்பார் மற்றவர்களை பார்க்கிலும் கடினமான வார்த்தைகளால் யோபை உடைத்தான். வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? யோபு காட்டு கழுதைக்கு ஒப்பானவன் என்று சொல்லி சாடுகிறவனாக காணப்பட்டான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபு சொல்லுகிறான் நான் உங்கள் சூழ்நிலையிலும் நீங்கள் என் சூழ்நிலையிலும் இருந்தால், உங்களை போல அல்லாமல் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன் என்றும் என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும் என்றும் அவன் சொல்லுகிறான். நாம் பேசுகிற வார்த்தைகள் மற்றவர்களை கட்டுகிறதாக காணப்பட வேண்டும்.
ஒரு சபையில் வாலிபன் ஒருவன் தன்னுடைய வருத்தத்தை மற்ற ஒரு சகோதரரிடம் பகிர்ந்துகொண்டார். எனக்கு அநேக வருடங்களாக திருமணத்திற்காக என்னுடைய பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அநேக தடைகள் வந்து கொண்டே காணப்படுகிறது. காரியம் கைகூடி வருவதை போல காணப்படுகிறது, ஆனால் கடைசியில் வருத்தத்துடன் முடிகிறது. ஒரு பெண்ணோடு நிச்சயம் எல்லாம் முடிந்தாயிற்று; ஆனால் நிச்சயத்திற்கு பின்பு சில வாரத்தில் என் திருமணம் தடையாகிவிட்டது என்று சோகத்துடன் சொன்னார். அதை கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு வாலிபன் அவனை பார்த்து சொன்னான் உன் தேவன் உனக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தருவார். ஈசாக்குக்கு ரெபெக்காளை கொடுத்தவர் உனக்கும் ஒரு ரெபெக்காளை ஆயத்தம் பண்ணிவைத்திருக்கிறார். நீ பிறப்பதற்கு முன்பாகவே உன் வாழ்க்கை துணை யார் என்பதை அவர் தீர்மானம் பண்ணியிருக்கிறார். ஆகையால் ஏற்ற வேளையில் காரியம் கைகூடி வரும்படி கர்த்தர் செய்வார் என்று சொன்னார். அதன்படி அடுத்து சில வாரத்திற்குள்ளாக அந்த வாலிபனுக்கு நல்ல திருமணம் நடந்தது. மற்றவர்கள் சூழ்நிலையை அறிந்து அவர்களை திடப்படுத்துங்கள். திடன் சொல்லுங்கள். இழப்புகளை சந்தித்தவர்களை பார்த்து அவர்களுக்கு திடன் சொல்லுங்கள். மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! (நீதி 15:23) என்று சொல்லுகிறது. தக்க சமயத்தில், தக்க வார்த்தைகளால் மற்றவர்களுக்கு திடன் சொல்லுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org