யோபு 37:5. தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
ஆராய்ந்து முடியாதவைகள், எண்ணி முடியாதவைகள், கணக்கிலடங்காதவைகள், வழியே இல்லாத இடங்களில் வழியை உண்டாக்குகிறவைகள் போன்ற அற்புதமான காரியங்களை செய்வதென்றால் நம்முடைய ஆண்டவருக்கு மிகவும் எளியது; மாத்திரமல்ல மிகவும் அவருக்கு பிரியம். இந்த வார்த்தையை எலிகூ என்பவன் யோபுக்கு சொல்லுகிறவனாக காணப்படுகிறான். உண்மையில் ஆண்டவர் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை உங்களுடைய வாழ்க்கையில் செய்ய வல்லவர் என்பதை முதலாவது தேவ ஜனங்கள் விசுவாசிக்க வேண்டும்.
பொதுவாக முற்றிலும் இயலாத, எதிர்பாராத காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது ஆச்சரியத்தில் திகைத்துவிடுவீர்கள். அவருடைய கரத்தின் கிரியைகளை பார்க்கும்போது மனுகுலத்திற்கு இன்றும் கிரகிக்க கூடாத காரியமாக காணப்படுகிறது. எத்தனையோ மடங்கு அறிவியல் பெருகினாலும் கர்த்தருடைய கிரியைகளை ஒருவனாலும் ஆராய்ந்து முடியாது. நாசா விஞ்ஞானிகள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ரஷ்ஷிய விஞ்ஞானிகள் என்று யார் நினைத்தாலும் ஆண்டவருடைய ஞானத்தை ஒருவனாலும் அளந்து தீர முடியாது. அப்பேற்பட்ட ஆண்டவர் உங்களுக்கு கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை செய்வார்.
ஆட்டிடையன் அரசனாவான் என்பது கிரகிக்க கூடாத காரியம், திக்குவாயான் இருபது இலட்சம் ஜனங்களை நடத்துவான் என்பது கிரகிக்க முடியாத காரியம், அடிமையாக விற்கப்பட்டவன் எகிப்து தேசத்திற்கே அதிபதியாவான் என்பது கிரகிக்க கூடாத காரியம். நீங்கள் இருக்கும் சூழ்நிலையை கர்த்தர் நன்றாக அறிந்திருக்கிறார். அவர் துவக்கத்தை முடிவிலிருந்தும், முடிவை துவக்கத்திலிருந்தும் அறிகிறவர். அடுத்து பத்து வருடங்களுக்கு பிறகோ, இருபது வருடங்களுக்கு பிறகோ, அல்லது சில வருடங்களுக்கு பிறகோ உங்கள் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் கர்த்தர் சகலத்தையும் அறிந்தவராய் இருக்கிறார்.
திருமணமாகி சுமார் ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு ஐந்து வருடங்கள் கழித்து குழந்தையை தரப்போவதையும் அதன்பின்பு மறுபடியும் இரண்டாம் குழந்தையை தரப்போவதையும் முதல் ஐந்து வருடங்கள் அந்த தம்பதிகள் அறியாமல் இருந்திருக்கலாம். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கலங்கி கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் கிரகிக்க கூடாத பெரிய காரியங்களை செய்கிற கர்த்தர் அவர்கள் எதிர்காலத்தையே மகிழ்ச்சியாக மாற பண்ணினார். உங்களுக்கும் கர்த்தர் கிரகிக்க கூடாத பெரிய காரியங்களை செய்வார். நீங்கள் விரும்புவதை காட்டிலும் பெரிய காரியங்களை செய்வார். ஆகையால் கர்த்தர் மீது விசுவாசத்தோடு இருங்கள்; கிரகிக்க கூடாத காரியங்களை நீங்கள் காண்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org