தேவனுடைய விரல் (Finger of God)

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்,   தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே (லூக்கா 11:20).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/abMiFBXKxNk

தேவனுடைய விரல் மற்றும் தேவனுடைய கரம் என்பது அவருடைய அளவிடமுடியாத நிகரற்ற வல்லமையைக் குறிக்கிறது. நம்முடைய தேவன் ராஜாதி ராஜா,   கர்த்தாதி கர்த்தா,   சர்வ வல்லமையுள்ளவர்,   நாம் காண்கிறவைகள் அத்தனையும் அவருடைய விரலின் கிரியைகளாகக் காணப்படுகிறது என்று சங். 8:3-ல் எழுதப்பட்டிருக்கிறது. நாம் ஆராதிக்கிற தேவனோடு யாரும் போட்டிப் போட முடியாது. பிசாசு ஒருநாள் நான் வானத்திற்கு ஏறுவேன்,   நட்சத்திரங்களுக்கு மேலாகச் சிங்காசனத்தை அமைப்பேன்,   உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்று தன் இருதயத்தின் சொன்னான்,   உடனே கர்த்தர் அவனைத் தள்ளிப் போட்டார். எகிப்தின் ராஜாவாகக் காணப்பட்ட பார்வோன்,   மோசேயையும் ஆரோனையும் பார்த்து உங்கள் கர்த்தரின் வார்த்தையைக் கேட்க அவர் யார்,   நான் உங்களைப் போக விடுவதில்லை என்றான்,   அவனை பத்து வாதைகளினால் கர்த்தர் தண்டித்து மண்டியிடும் படிக்குச் செய்து,   கடைசியில் சமுத்திரத்தின் ஆழத்தில் தள்ளிப் போட்டார். அசீரிய ராஜாவாகிய சனகெரிப் எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்கு தப்புவித்ததில்லை,   உங்கள் தேவன் எப்படி தப்புவிப்பார் என்றான். கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்,   அவன் ஒரு லட்சத்து எண்பத்து ஐந்தாயிரம் பேரை வெட்டிப்போட,   சனகெரிப் செத்த முகத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பிப் போனான். நேபுகாத்நேச்சார் மூன்று எபிரேய வாலிபர்களைப் பார்த்து,   உங்களை என் கைக்கு தப்புவிக்கிற தேவன் யார் என்றான்,   அக்கினி சூளையில் நான்காவது நபராக இயேசு தோன்றி அவர்களைத் தப்புவித்ததுமல்லாமல்,   அகந்தையாய் காணப்பட்ட நேபுகாத்நேச்சாரைத் தாழ்த்தி புல்லை தின்னும் படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே,   நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர்,   அவர் உங்களுக்காக யுத்தம் செய்கிறவர். ஆகையால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அவிசுவாசத்தினால் கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்தினது போல,   ஒருநாளும் கர்த்தருடைய வல்லமையை நீங்கள் மட்டுப்படுத்தி விடாதிருங்கள். 

பிசாசு தன்னை வல்லமையுடையவனைப் போலக் காட்டலாம்,   அதிகாரம் உடையவனைப் போல வெளிப்படுத்த முயலலாம். மோசேயும்,   ஆரோனும் எகிப்தில் செய்த அனேக அற்புதங்களை,   எகிப்தின் மந்திரவாதிகள் தங்கள் மாயவித்தைகளினால் செய்தார்கள். ஆனால்,   ஆரோன் தன் கோலினால் புழுதியின் மேல் அடித்தவுடன் பேன்கள் திரளாய் புறப்பட்டு வந்து எகிப்தியரை வாதித்தது. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப்  பிறப்பிக்கும்படி  முயற்சி செய்தார்கள்,   அவர்களால் கூடாமற்போயிற்று. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி,   இது தேவனுடைய விரல் என்றார்கள். பிசாசின் வல்லமைக்கு ஒரு எல்லைக் காணப்படுகிறது. ஆனால் நம்முடைய தேவனுடைய வல்லமைக்கு எல்லையே இல்லை. அவரால் எல்லாம் ஆகும்,   அவர் கட்டளையிட எல்லாம் நிற்கும். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி,   கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு தம்முடைய வல்லமையின் பராக்கிரமத்தை வெளிப்படுத்துவார். 

இயேசு,   இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களில் தம்முடைய விரலினால்  பிசாசுகளைத் துரத்தினார். ஊமையர்கள்,   செவிடர்கள்,   குருடர்கள்,   பிணி யாளிகள் எல்லாரையும் தம்முடைய வல்லமையின் பராக்கிரமத்தினால் விடுவித்தார். அதே அற்புதக் கரங்களின் விரல் உங்களுக்காக வெளிப்படும். உங்கள் எதிராளிகளுக்கு நியாயத்தீர்ப்பின் விரலாகவும்,   உங்களுக்கு  அற்புதங்களைச் செய்யும் விரலாகவும் வெளிப்படுத்தி,   உங்களை விடுவித்து மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *