விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள், எகிப்தியர் அப்படிச் செய்யத் துணிந்து அமிழ்ந்துபோனார்கள் (எபி. 11:29).
ஒரு மாதத்தின் முதல் நாளில் பிரவேசித்திருக்கிறோம். ஒரு வருஷத்தின் ஆறு மாதங்களையும் கர்த்தர் கிருபையாய் கடக்கும் படிக்குச் செய்தார். அதுபோல இந்த புதிய மாதத்தையும் விசுவாசத்தினாலே கடந்துசெல்லுங்கள். நம்முடைய முற்பிதாக்கள் கடினமான சூழ்நிலைகளையும், கஷ்டமான காலங்களையும் விசுவாசத்தினாலே கடந்து போனார்கள் என்று வேதம் கூறுகிறது. அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளும் கூட, உங்கள் எதிரான சூழ்நிலைகளை விசுவாசத்தினாலே கடந்து செல்லுங்கள். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்கா தேசத்தின் ஜனாதிபதியாக 1861ம் ஆண்டிலிருந்து 1865ம் ஆண்டுவரைக்கும் காணப்பட்டார். அப்போது அங்கே உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. வடமாகாணங்களுக்கும் தென் மாகாணங்களுக்கும், கறுப்பின ஜனங்கள் அடிமைத்தனத்தின் நிமித்தம் கடினமான யுத்தம் நடந்தது. அனேக பொதுமக்களும், சுமார் எழுநூற்று ஐம்பதினாயிரம் ராணுவ வீரர்களும் மரித்து போனார்கள். ஆனால் ஆபிரகாம் லிங்கன் விசுவாசத்தோடு இதுவும் கடந்துபோகும் என்று அடிக்கடி அறிக்கையிடுகிறவராகக் காணப்பட்டார். அதுபோல உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் கடந்து சென்றுவிடும், இக்காலத்தில் பாடுகள் காணப்படலாம், ஆனால் உங்களுக்குக் கர்த்தருடைய மகிமை வெளிப்படப் போகிறது. ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலையடிவாரத்திலிருந்து, கானானின் கரையாகிய காதேஸ்பர்னேயாவை அடைய பதினொரு நாட்கள் நடை தூரம் தான் தேவைப் பட்டது. ஆனால் கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்தை சோதிக்குப்படிக்குச் சுற்றி நடக்கப்பண்ணினார். அதுபோல உங்கள் வாழ்க்கையிலும் வீண் அலைச்சல்கள் காணப்படலாம், காலதாமதங்களும் காத்திருப்புகளும் காணப்படலாம், ஏன் எனக்கு மட்டும் இப்படிப்பட்ட பாதைகள் என்ற கேள்விகள் காணப்படலாம், வியாதிகளின் நிமித்தம் கலங்கிப்போய் நிற்கலாம், இல்லை என்ற நிலைகள் காணப்படலாம். இவையனைத்தும் உங்கள் பின்னாட்களில் கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யும்படிக்கு என்பதை மறந்துபோய் விடாதிருங்கள்.
புறப்பட்டுச் செல்லுங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிட்ட தேவன், உங்களைப் பார்த்து விசுவாசத்தோடு முன்னேறி செல்லுங்கள் என்று ஆலோசனை கூறுகிறார். உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லுவேன் என்று வாக்களித்தவர், கொண்டு சேர்ப்பதற்கும் திராணி உள்ளவர். விருதாவாக என்னைத் தேடுங்களென்று கர்த்தர் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை, அவரை விசுவாசத்தோடு தேடுகிற உங்களுக்குப் பலன் அளித்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar