இயேசுவை அனுப்பிவிட்டவர்களும்,   ஏற்றுக்கொண்டவர்களும்(Those who sent and accepted Jesus)

அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே,   தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி,   திரும்பிப் போனார்…. இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள் (லூக்கா 8:37-40).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/pFLeP0a_Orc

இயேசு ஊழியத்தின் நாட்களில் தன்  சீஷர்களைப்  பார்த்து கலிலேயா கடலின் அக்கரைக்கு,   புறஜாதிகளின்  தேசங்களுக்குப் போவோம் வாருங்கள் என்றார்,   அப்படியே அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். கர்த்தர் முகாந்தரம் இல்லாதபடிக்கு எந்த இடத்திற்கும் போவதில்லை. அங்கே அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் கதரேனருடைய தேசத்தில் காணப்பட்டான்,   அவனை விடுவிக்கும் படிக்குக் கர்த்தர் அங்குக் கடந்து சென்றார். அதை அறிந்த சத்துரு காற்றையும்,   ஜலத்தின் கொந்தளிப்பையும் உண்டாக்கினான். இயேசுவும் சீஷர்களும் மோசமடையத்தக்கதாக படவு ஜலத்தினால் நிறைந்தது. ஆண்டவர் எழுந்து காற்றையும்,   ஜலத்தின் கொந்தளிப்பையும் உண்டாக்கின பிசாசை அதட்டினார்,   உடனே அமைதி உண்டாயிற்று. கர்த்தருடைய பிள்ளைகளே,   கர்த்தருக்குள்ளாக ஜீவிக்கிற உங்கள் வாழ்க்கையில் எழும்புகிற எல்லா கொந்தளிப்புகளுக்குப் பின்னால் பொல்லாத சத்துரு காணப்படுகிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவனோடு கெஞ்சுகிறவர்களாகவும்,   பேரம் பேசுகிறவர்களாயும் இராமல் அதட்டி அப்புறப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தில் நீங்கள் அதட்டும்  போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

கதரேனருடைய தேசத்தில் சேர்ந்த வேளையில் நெடுநாளாய் பிசாசுகள் பிடித்த ஒருவன் எதிர்கொண்டுவந்தான். வேதத்தில் பிசாசு ஒருவனைப் பிடிக்கும் போது அவனை எவ்வண்ணம் வேதனைப்படுத்தும் என்பதை இந்த இடத்தில் தான் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. பிசாசுகள் ஒருவனைப் பிடித்தால்,   ஆண்டவரால் அவன் விடுவிக்கப்படும் வரைக்கும்,   அவனை விட்டுச் செல்வதில்லை. ஆகையால் அவன் உங்களைப் பிடிக்கத்தக்க அருவருப்பான எந்த காரியங்களிலும் ஈடுபடாதிருங்கள்,   பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள். அதுபோல அவன் வஸ்திரம்  தரியாதவனாகக்  காணப்பட்டான்.  ஆதிப்பெற்றோரின் மகிமையின் வஸ்திரத்தை உரிந்து,   அவர்களை நிர்வாணிகள் என்று குற்றஞ்சாட்டினவன்,   இன்றும் கர்த்தருடைய பிள்ளைகளைப் பாவத்தில் விழத்தள்ளி,   இரட்சிப்பின் வஸ்திரத்தை உரிந்து போட  முயற்ச்சிக்கிறான். அதுபோல அவன் வீட்டில் தங்கவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது,   இன்றும் வீணாய் அலைந்து திரிகிற திரளான ஜனங்கள் உண்டு. சபை என்னும் குடும்பத்தை விட்டு ஓய்வுநாட்களில் கூட அலைந்து திரிகிறவர்களாய் காணப்படுவார்கள். அப்படிப்பட்ட அத்தனைப் பேரையும் ஆட்கொண்டிருக்கிறவன் பொல்லா  பிசாசாக காணப்படுகிறான். பிரேதக் கல்லறைகளில் தங்குகிறவனாகக் காணப்பட்டான் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  உலர்ந்து போன,   உயிரற்ற,   அழுகிப்போன சரீரங்கள் நடுவில் வாசம் பண்ணுகிறவனாய் அவன் காணப்பட்டான். கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில் அழைத்துக் கொண்டு போய்,   அவர்கள் இஸ்ரவேல் வீட்டார்கள் என்று கர்த்தர் சொன்னார். இன்றும் உயிர்மீட்சியடையாத,   எழுப்புதலற்ற குளிர்ந்து போன திரளான ஜனங்கள் உண்டு. சர்தை சபை  செத்ததாகக் காணப்பட்டது போல,   உயிரற்ற ஆராதனைகளும்,   இருதயங்கள் கொழுந்து விட்டு எரியும்படி செய்யாத பிரசங்கங்களும் உண்டு. மெலித்தா தீவில் குளிர்ந்த விறகுகள் நடுவில் விரியன் பாம்பு படுத்துக்கொண்டிருந்ததைப் போல,   பிசாசு இப்படிப்பட்டவர்கள் நடுவில் வாசம் செய்கிறான். 

பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு,   அவருக்கு முன்பாக விழுந்து,   இயேசுவே,   உன்னதமான தேவனுடைய குமாரனே,   எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். இயேசு உன் பெயர் என்ன என்று கேட்டார்,   அவன் லேகியோன் என்றான்,   காரணம் அனேக பிசாசுகள் அவனைப் பிடித்திருந்தது. ரோம ராணுவத்தில் ஒரு லேகியோன் என்பது சுமார் ஆராயிரம் வீரர்களைக் கொண்டது. பிசாசுகள் இயேசுவை  வேண்டிக்கொண்டதின்  நிமித்தம்   அவைகளைப் பன்றிகளுக்குள்  போகும் படிக்குக் கர்த்தர் கட்டளை கொடுத்தார். உடனே அந்தப் பன்றி கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து அமிழ்ந்து, மாய்ந்தது. உடனடியாக பிசாசு பிடித்தவனுக்கு விடுதலை கிடைத்தது,   அவன் வஸ்திரம் தரித்தவனாய் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து  எப்பொழுதும் அவரோடு கூடக் காணப்படும் படிக்கு உத்தரவு கேட்டான்,   ஆனால் ஆண்டவர் திரும்பி தன் வீட்டிற்கும் தன் பட்டணத்திற்கும் போய் நடந்தவற்றை மற்றவர்களுக்கு அறிவிக்கும் படிக்கு அவனை அனுப்பிவிட்டார். ஆனால்  கதரேனருடைய தேசத்தில் காணப்பட்ட மற்ற ஜனங்கள் பயந்து,   இயேசுவை அவர்கள் தேசத்தை விட்டு போய்விடும் படிக்குக் கேட்டுக்கொண்டார்கள். ஆகையால் அவர்கள் வாழ்க்கையில் இரட்சிப்பும்,   அற்புதங்களும் நடக்கவில்லை. அவர்கள் பிசாசினால் பிடிக்கப்பட்ட மனுஷனை விட,   அவனிடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மனுஷனுக்கு அதிகமாய் பயந்தார்கள்! அவர்கள் வேண்டுதலை ஏற்ற இயேசு அவ்விடத்தை விட்டு மீண்டும் கலிலேயா கடலின் இக்கரைக்கு வந்துவிட்டார். கர்த்தருடைய பிள்ளைகள்,   ஒருநாளும் இயேசுவை உங்களை விட்டு,   குடும்பங்கள்,   சபைகளை விட்டு அனுப்பிவிட முயலாதிருங்கள். 

இயேசு,   மீண்டும் கலிலேயா பகுதியில் வந்தவுடன்,    ஜனங்களெல்லாம் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். அங்கு அனேக அற்புதங்கள் நடந்தது. ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ளவனுடைய  பன்னிரண்டு வயதுள்ள ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்து,   மரித்துப் போனாள்.   அவளைக் கர்த்தர் உயிரோடு எழுப்பினார். பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்த ஸ்திரீ,   அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்,   உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. கர்த்தருடைய பிள்ளைகளே,    ஆண்டவரை எப்பொழுதும் உங்களோடு வைத்துக் கொள்ள வாஞ்சியுங்கள்,   அவரை உங்கள் உள்ளங்களில்,   வீடுகளில்,   சபைகளில் ஏற்றுக்கொள்ளுங்கள்,   அவரை வருந்தி அழையுங்கள். அப்பொழுது அவருடைய அற்புத வல்லமை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். சூலமித்தியைப் போல,   லவோதிக்கேயா சபையைப் போல ஆண்டவரைப் புறம்பாக்கி விடாதிருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *