கலா 1:10. இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாரை பிரியப்படுத்தப்போகிறீர்கள்? உங்கள் உறவினர்களையா? வேலை ஸ்தலங்களில் இருக்கும் எஜமான்களையா? நண்பர்களையா? இல்லை தேவனையா? யாரை பிரியப்படுத்தப்போகிறீர்கள்? நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கும் TV நிகழ்ச்சியின் மூலம் மற்றவர்களை பிரியப்படுத்த நாடுகிறீர்களா இல்லை தேவனை பிரியப்படுத்த நாடுகிறீர்களா? இப்படி நீங்கள் அணியும் நகை, ஆடை, தேர்ந்தெடுக்கும் வேலை, தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை என்று எல்லாவற்றிலும் யாரை பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? மனிதர்களை பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் அந்த நேரமே தேவனுடைய ஊழியக்காரன் என்ற ஸ்தானத்தை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கலாத்திய சபையில் வேறொரு சுவிசேஷம், வேறொரு கிறிஸ்து பிரசங்கிப்பதை பவுலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றும் அநேக இடங்களில் பிரமானத்திற்கு அடிமையாகி, அநேக சபையில் தங்கள் பாரம்பரியங்களை திணித்து, இது தான் கர்த்தர் விரும்புகிற காரியம் என்று வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற கூட்டங்கள் பெருகிவிட்டது. பவுல் மற்றவர்களுக்கு தன்னுடைய உடையை கேட்டால் தாராளமாக கொடுத்துவிடுவான்; ஆனால் எங்கே சத்தியம் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே தைரியமாக எதிர்கொள்ளுகிறவனாக செயல்பட்டான். பேதுரு வயதில் பவுலை விட மூத்தவனாக இருந்தாலும், அவன் புறஜாதிகள் மத்தியில் இருந்து போஜனம் பண்ணுவதை தவிர்த்தபோது நேரடியாக பவுல் பேதுருவை எதிர்த்தான்.
இன்று நீங்கள் ஒரு ஆணித்தரமான தீர்மானம் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவனை தவிர மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பிரியப்படுத்த முயற்சிக்க கூடாது. ஒரு வேளை தேசத்தின் ஜனாதிபதி வேதத்திற்கு முரண்பாடான காரியங்களை செய்ய சொன்னாலும், அவற்றை செய்ய ஒத்துழைக்கலாகாது. சில சபைகளில் ஆண்கள் மீசை வைக்க கூடாது, தரையில் தான் உட்கார வேண்டும், கை தட்ட கூடாது, கையை தூக்க கூடாது என்றெல்லாம் பலவிதமான போதனைகளை மக்கள் மனதில் செலுத்தி வேறொரு சுவிசேஷத்தை திணிக்கிறார்கள். இப்படிப்பட்ட துர் உபதேசங்களை விட்டு விலகி, தேவ ஜனங்கள் மனிதர்களை பிரியப்படுத்தாமல், எல்லாவற்றிலும் தேவனை பிரியப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org