எல்லாவற்றையும் இழந்தாகிலும் பரலோகத்தை ஆதாயம் செய்யுங்கள்.

அன்றியும்,    பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் கண்டு,    மறைத்து,    அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய்,    தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று,    அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்  (மத்தேயு 13:44).

இயேசுவின் ஊழியத்தின் நாட்களில் அனேக உவமைகளை அவர் கூறினார். அவருடைய உபதேசத்தின் மூன்றில் ஒரு பகுதி உவமைகளின் வாயிலாகவிருந்தது. மத்தேயு 13ம் அதிகாரத்தில் ஏழு உவமைகளைக் கூறினார்,    அதில் ஆறு உவமைகள் பரலோக ராஜ்யத்தைப் பற்றியது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்திற்கு ஒப்பாக இருக்கிறது என்று ஆண்டவர் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. பொக்கிஷம் என்பது விலையேறப்பெற்றது,    ஆகையால் பரலோக ராஜ்யத்தை விலையேறப்பெற்ற பொக்கிஷமாகக் கர்த்தருடைய ஜனங்கள் கருதவேண்டும். நாம் காண்கிற அத்தனைக் காரியங்களும்  அநித்தியமானவை,    அவைகள் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது  என்று 2 பேதுரு 3:7ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் காணாத தேவனுடைய ராஜ்யம் நித்தியமானது. பூமியில் காணப்படுகிற ராஜ்யங்களும்,    அதின் ஆளுகைகளும் ஒரு நாளில் காணாமல் போய்விடும்,    ஆனால் தேவனுடைய ராஜ்யம் அழியாத நித்திய கல்ராஜ்யம்,    அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

தேவன் பரலோக ராஜ்யத்திற்கு ஒப்பாகிய பொக்கிஷத்தை நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறார்,    எதற்காகவெனில்,    கர்த்தருடைய ஜனங்கள் அதைப் புதையல்களைத் தேடுவது போல,    முக்கியப்படுத்தித் தேடவேண்டும் என்பதற்காக. நம்முடைய வாழ்க்கையில் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்,    அவருடைய நீதியையும் தேடவேண்டும் என்றும் காத்தர் கட்டளையிட்டிருக்கிறார். இயேசுவைத் தேடுவதும் அவருடைய ராஜ்யத்தைத் தேடுவதும் ஒன்றாய் காணப்படுகிறது. அவரைத் தேடினால் தென்படுகிறவர்,    சூலமித்தி தன் நேசரைத் தேடி அவரைக் கண்டுபிடித்தாள்,    அதிகாலையில் இருட்டோடே மகதலேனா மரியாள் தேடி இயேசுவைக் கண்டுபிடித்தாள். ஆனால் இந்நாட்களில் அவரைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,    தேவன் பரலோகத்திலிருந்து  மனுப்புத்திரரை  கண்ணோக்கின வேளையில்,    அவர்கள் எல்லாரும் வழிவிலகி,    ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் என்று கண்டு வேதனைப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,    உண்மையாய் கர்த்தரைத் தேடுங்கள்,    அவருடைய சமூகத்தை நித்தமும் நாடுங்கள்,    சபை  கூடிவருவதைச்  சிலர் விட்டுவிடுகிறது போல நீங்களும் விட்டுவிடாதிருங்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல்,    இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்டவுடன்,    தனக்கு லாபமாகக் காணப்பட்ட எல்லாவற்றையும் நஷ்டம் என்றும் குப்பை என்றும் ஒதுக்கித் தள்ளினார். எப்படியாயினும் கர்த்தருடைய வருகையில் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து அவருடைய ராஜ்யத்தில் பங்குகொள்ளவேண்டும் என்பது அவருடைய வாஞ்சையாகக் காணப்பட்டது.  ஆகையால் நீங்கள் பூமியில் எதை இழந்தாலும் பரவாயில்லை,    நித்தியத்தை இழந்து விடாதிருங்கள். பரலோக ராஜ்யத்தைக் குறித்த வாஞ்சையும் தாகமும் கர்த்தருடைய ஜனங்கள் நடுவில் குறைந்து கொண்டு வருகிறது. இயேசு,    சபையைச் சேர்த்துக் கொள்ளும் படிக்கு  வரப்போகிறார்  என்ற செய்திகள் சபைகளின் பலிபீடங்களிலும் குறைந்துகொண்டுவருகிறது.   நோவாவின் நாட்களிலும்,    லோத்துவின் நாட்களிலும் நடந்தது போல நிர்விசாரங்களும்,   ஆகாரத்திரட்சிகளும்,    சோம்பல்களும்,    பாவங்களும் எங்கும் காணப்படுகிறது. கர்த்தருடைய வருகை திருடன் வருகையைப் போல  எதிர்பாராத நேரத்தில் சம்பவிக்கும். எதிர்பார்ப்போடும்,    ஆயத்தத்தோடும் காணப்படுகிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்.


கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *